அனுபவமற்ற ஒரு குழுவினரின் கைகளில் ஆட்சி அதிகாரம் சென்றதன் விளைவாக நாடு கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஹெச்.ஏ. ஹலீம் தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பலமண்டலக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக கூறினார்.
தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட பல வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும், மக்கள் எதிர்பார்த்த மாற்றம் ஏற்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
மேலும், வாழ்க்கைச் செலவின உயர்வை கட்டுப்படுத்துவதற்கான தெளிவான திட்டங்கள் அரசாங்கத்திடம் இல்லை என்றும், நாளுக்கு நாள் மக்கள் பல்வேறு பொருளாதார சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் நாடு பொருளாதார ரீதியாக திவாலான நிலையில் இருந்ததாக குறிப்பிட்ட அவர், அந்த சூழலில் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பால் நாட்டை மீளக் கட்டியெழுப்பும் வாய்ப்பு கிடைத்ததாக கூறினார்.
இந்நிலையில், உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளும், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலைகளும் தொடரும் நிலையில், இலங்கை மீண்டும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தால் உதவிக்கரம் நீட்ட நாடுகள் முன்வருவது சிரமமாக இருக்கும் என அவர் எச்சரித்தார்.
அனுபவமற்ற நிர்வாகத்தினால் நாடு தற்போதைய நெருக்கடியை நோக்கிச் செல்கிறது எனக் கூறிய அவர், நாட்டை மீண்டும் முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லும் திறன் ஐக்கிய மக்கள் சக்தியிடமே இருப்பதாக வலியுறுத்தினார்.
அத்துடன், மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்து வருவதாகவும், அரசாங்கம் விரைவில் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.


