பிரதமரிடம் பதில் கேட்க திஸ்ஸாவுக்கு நீதிமன்றம் அனுமதி

0
5

பிரதமர் ஹரிணி அமரசூரியாவிடம் கேள்விகள் கேட்க திஸ்ஸா அத்தநாயக்கவுக்கு நீதிமன்றம் அனுமதி

எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தேசிய அமைப்பாளர் திஸ்ஸா அத்தநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரியாவின் கல்வித் தகுதிகள் மற்றும் 1987–1989 காலகட்டத்தில் ஜே.வி.பி. கிளர்ச்சியின்போது ஏற்பட்டதாகக் கூறப்படும் அழிவுகள் தொடர்பாக அவருக்கு இருந்த அறிவு குறித்து கேள்விகள் எழுப்ப அனுமதி கோரி தாக்கல் செய்த விண்ணப்பத்தை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (12) அனுமதித்துள்ளது.

இது, தன்னை அவதூறாகப் பேசியதாக குற்றம் சாட்டி பிரதமர் ஹரிணி அமரசூரியா திஸ்ஸா அத்தநாயக்க மற்றும் ஏசியா பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் (தனியார்) நிறுவனத்திற்கு எதிராக தாக்கல் செய்த 100 மில்லியன் ரூபா இழப்பீட்டு வழக்குடன் தொடர்புடையதாகும்.

2024 ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் திஸ்ஸா அத்தநாயக்க வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்துகள் அவதூறானவை என தெரிவித்து பிரதமர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, திஸ்ஸா அத்தநாயக்க சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி இரங்க பெரேரா, பிரதமருக்கு வினாக்கள் (Interrogatories) அனுப்ப அனுமதி கோரும் மனுவை ஆதரித்தார்.

அந்த மனுவில் சுமார் 19 கேள்விகள் இடம்பெற்றிருந்தன. அவற்றில் பெரும்பாலானவை பிரதமரின் கல்விப் பின்னணி மற்றும் 1987–1989 ஜே.வி.பி. கிளர்ச்சிக் காலத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள், குறிப்பாக ஸ்ரீ தலதா மாளிகை மீதான குண்டுத் தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக அவருக்கு முன்கூட்டியே அறிவு இருந்ததா என்பது குறித்தவையாக இருந்தன.

இந்த கேள்விகளுக்கு மனுதாரரான பிரதமர் ஹரிணி அமரசூரியா பதிலளிக்க வேண்டிய நிலையில், வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஜூலை 20 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

பிரதமர் தனது மனுவில், 2024 ஆகஸ்ட் 19 ஆம் திகதி மாவனெல்லையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் திஸ்ஸா அத்தநாயக்க உரையாற்றியபோது, தேசிய மக்கள் சக்தி (NPP) ஆட்சி அமைந்தால் கண்டி தலதா பெரஹெரா நிறுத்தப்படும் என்றும், அதுகுறித்து தாமும் கருத்து வெளியிட்டதாகவும் கூறி பொது மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.