கொழும்பில் 5,000க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் இணைந்து கின்னஸ் உலக சாதனை!
கொழும்பில் இன்று நடைபெற்ற பிரம்மாண்டமான கலாசார நிகழ்வில் 5,000க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் ஒன்றிணைந்து, உலகின் மிகப்பெரிய பரதநாட்டியப் பயிற்சி நிகழ்வை நடத்தி கின்னஸ் உலக சாதனையைப் படைத்தனர்.
இந்த நிகழ்வு இந்தியாவின் சங்கமம் குளோபல் அகாடமி மற்றும் இலங்கையின் சம்கமிழ் லியா ஆகிய அமைப்புகளின் ஏற்பாட்டில் காலிமுகத்திடலில் நடைபெற்றது. இலங்கை, இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நடனக் கலைஞர்கள் இதில் பங்கேற்று பாரம்பரிய கலை மற்றும் கலாசார மரபை கொண்டாடினர்.
பாரம்பரிய உடைகளில் அலங்கரிக்கப்பட்டிருந்த கலைஞர்கள், பயிற்றுவிப்பாளர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஒருங்கிணைந்த பரதநாட்டிய அசைவுகளை நிகழ்த்தினர். பின்னர் நடைபெற்ற மதிப்பீட்டு செயல்முறைக்குப் பிறகு, கின்னஸ் உலக சாதனைச் சான்றிதழ் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது.
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, கலைஞர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்களின் சார்பில் கின்னஸ் உலக சாதனைச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டார். நிகழ்வில் உரையாற்றிய அவர், இந்த சாதனைக்காக அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்து, இந்தியா–இலங்கை மக்களுக்கிடையேயான உறவுகளை வலுப்படுத்துவதில் கலாசாரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பிரதி அமைச்சர்கள் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் மகிந்த ஜயசிங்க உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், சாதனை நிகழ்வைக் காண பெருமளவிலான மக்கள் திரண்டிருந்தனர்.
எல்லைகளைக் கடந்து கலாசார பரிமாற்றத்தையும் ஒற்றுமையையும் மேம்படுத்துவதோடு, பரதநாட்டியத்தின் காலத்தால் அழியாத பாரம்பரியத்தை உலக அரங்கில் வெளிப்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


