வங்கக் கடலின் தென்கிழக்குப் பகுதிகளில் உருவாகியுள்ள சூறாவளிக்கு அசனி என பெயரிடப்பட்டுள்ளது.
இலங்கையினால் இந்த பெயரிடப்பட்டது.
அடுத்த 24 மணி நேரத்தில் அசனி தீவிர சூறாவளியாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று ஞாயிற்றுக்கிழமை எச்சரித்துள்ளது.
‘அசானி’ சூறாவளி வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் கிழக்கு-மத்திய வங்கக் கடலில் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இது மே 10 ஆம் திகதி வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா கடற்கரையை அடைய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மே 9ஆம் திகதி ஒடிசாவை அண்டிய கடல் பகுதி கொந்தளிப்பாக மாறும், கடலில் காற்றின் வேகம் மணிக்கு 80-90 கி.மீ. வரை அதிகரிக்கும். மே 11ஆம் திகதி வரை காற்றின் வேகம் நீடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சூறாவளி காரணமாக மறு அறிவித்தல் வரை தென்கிழக்கு வங்காள விரிகுடாவை அண்மித்த கடற்பிராந்தியங்களை பயன்படுத்த வேண்டாமென இலங்கை மீனவர்களை, வளமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.