ரசிகர்களுடான வீடியோ கலந்துரையாடலில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாகவும், வெளிப்படையாகவும் பதிலளித்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன்.
உலக நாயகன் கமலின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், தென்னிந்திய திரையுலகில் பிஸியான நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தெலுங்கில் இவர் நடித்த கிராக் படம் அண்மையில் வெளியாக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ரசிகர்களிடம் வீடியோ மூலம் உரையாடி, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சலிக்காமல் பதிலளித்து அசத்தியுள்ளார் ஸ்ருதிஹாசன்.
தமிழ் அஜித் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற பிங்க் திரைப்படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை, தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வக்கீல் சாப் என்ற பெயரில் ரிலீஸ் ஆனது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஸ்ருதிஹாசன். மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள லாபம் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஸ்ருதிஹாசன். இந்த படத்தின் ரிலீசுக்காக ஆர்வமாக காத்திருக்கிறார்.
தற்போதைய கொரோனா லாக்டவுன் சமயத்தில் தனது காதலர் சாந்தனு ஹசாரிகாவுடன் ஹாயாக பொழுதை கழித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வட்டமிட்டாலும், அதைப்பற்றி எல்லாம் கவலைபடாமல் தனது காதலருடன் கொரோனா லாக்டவுன் நாட்களை கழித்து வருகிறார். மேலும், சமூக வலைதளங்களில் தன்னை பின் தொடர்பவர்களிடம் வீடியோ மூலம் கலந்துரையாடி, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் ஜாலியாக பதிலளித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.
அப்போது ரசிகர் ஒருவர் இணையத்தில் கிசுகிசுக்கப்பட்ட ஸ்ருதிஹாசன், சாந்தனு ஹாசரிகா திருமணம் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது கோபமடையாமல், இல்லை எனக்கு திருமணம் ஆகவில்லை என பதிலளித்துள்ளார் ஸ்ருதிஹாசன். இதைத் தொடர்ந்து, அப்பா போல் எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இருக்கா என கேள்வி கேட்கப்பட்ட போது, இல்லை என தெரிவித்துள்ளார்.
இது போன்ற ரசிகர்களின் பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு ஸ்ருதிஹாசன் பொறுமையாகவும், வெளிப்படையாகவும் பதிலளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.