சீனா வழங்கிய மூலப்பொருட்களின் உதவியோடு பாகிஸ்தான் உருவாக்கியுள்ள ‘பாக்வேக்’ கொரோனா தடுப்பூசியின் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்து பயன்படுத்தி வந்த பாகிஸ்தான் முதல் முறையாக உள்நாட்டில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்கி உள்ளது.
சீன அரசுக்கு சொந்தமான கான்சினோ நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் மூலப்பொருட்கள் செறிவூட்டப்பட்டு மிக அடர்த்தியான நிலையில் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய சுகாதார நிறுவனத்தில் இவை பிரித்தெடுக்கப்பட்டு தடுப்பூசிகளாக தயாரிக்கப்பட்டன.
இதன் பின்னர் நடந்த ஆய்வக சோதனைகளுக்குப் பின், 18 ஆயிரம் பேரிடம் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டதில், இதன் செயல்திறன் 74.8 சதவீதமாக இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து ‘பாக்வேக்’ எனப் பெயரிடப்பட்ட இந்த தடுப்பூசியின் விநியோகம் பாகிஸ்தானில் தொடங்கியுள்ளது.
அடுத்த சில நாட்களில் பாகிஸ்தானில் ‘பாக்வேக்’ தடுப்பூசி தயாரிப்பு பெரிய அளவில் தொடங்க உள்ளதாக பாகிஸ்தான் பிரதமரின் சுகாதாரத்துறை ஆலோசகர் டாக்டர்.பைசல் சுல்தான் தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசிக்கான மூலப்பொருட்களை சீனா வழங்கியிருந்தாலும், அதனை மேம்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டுவந்திருப்பது மிகவும் சவாலான பணி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.