திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முத்துநகர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், தமது வாழ்வாதாரத்திற்கே அடிப்படை ஆதாரமான வயல் நிலங்களை அபகரித்து, சோலர் திட்டத்திற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (03.01.2025) திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ள பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்துக்கு முன்பாக, விவசாயிகள் காலை ஒன்றுகூடி, தங்களது நிலைகளையும் கோரிக்கைகளையும் வலியுறுத்தி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
விவசாயக் காணியை அபகரிக்காதே!, வயிற்றுப் பசிக்கு சோலர் பவரா? ஜனாதிபதி அவர்களே நியாயத்தை பெற்று தாருங்கள், விவசாயிகளை வாழ விடு!, நீங்கள் வாழ்வது AC ரூமில்! நாங்கள் வாழ்வது தெருவிலா?, ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே! ஏழைகளை வாழ விடு! என பதாகைகளை ஏந்திய வண்ணம் குறித்த விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, விவசாயிகளால் பிரதேச ஒருங்கிணைப்பு கூட்டத்தில் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க அவர்களிடம் மனுவும் கையளிக்கப்பட்டது.
விவசாயிகளின் எதிர்ப்புக்கு ஆதரவாக பல சமூக அமைப்புகள், பகுதி மக்கள் மற்றும் நலன் விரும்பிகள் இணைந்து, தங்களது ஆதரவை வெளிப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.




