அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைவடையும் நிலையில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததை கண்டித்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக சகல கட்சிகளின் வருகையை நாங்கள் எதிர்பார்த்திருக்கின்றோம். ஆகவே அவர்களுடன் பேசுவோம். அது மாத்திரமல்லாமல் சிவில் சமூகங்கள், ஏனைய அமைப்புகளுடனும் தொடர்ந்து பேச இருக்கின்றோம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சித் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்து, செப்டம்பர் மாதம் 21ம் திகதியுடன் இரண்டு வருடங்கள் நிறைவடைகின்றது.
அவர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, தமிழ் மக்களுக்கு பல்வேறுபட்ட உறுதிமொழிகளை வழங்கினார்.
முக்கியமாக, தான் ஆட்சிக்கு வந்தவுடன் மாகாண சபை தேர்தல்கள் ஒரு வருடத்தில் நடக்கும் என்று சொல்லப்பட்டது.
இப்பொழுது இரண்டு வருடங்கள் முடிகின்ற தருணத்தில் கூட, மாகாண சபை தேர்தல்கள் எப்பொழுது நடக்கும் என்று அவர்களால் திட்டவட்டமாக சொல்ல முடியவில்லை, அவர்களது ஆட்சி காலகட்டத்தில் தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் கூட எழுந்திருக்கின்றது.
தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முப்படையினரிடமும் பேசியோ, ஏதோ ஒரு வகையில் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
முக்கியமாக வடக்கை பொறுத்தவரையில், இவர்கள் ஆட்சிக்கு வந்ததற்கு பிற்பாடு எவ்வளவு காணிகளை விடுவித்திருக்கிறார்கள்?
அமைச்சராக இருக்கக்கூடிய
சந்திரசேகர்,வடக்கு மாகாணத்தில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் தங்களது சொந்த பிழைப்புகளுக்காக ஏதோ காணிகளை விடும்படி கூறுவதாக கூறிக்கொண்டிருக்கிறார்கள். அவருக்கு ஒன்று தெரிய வேண்டும்,
அவர்கள் வந்து பல உறுதிமொழிகளை கொடுத்தும் கூட காணி பிரச்சனையை அவர்களால் தீர்க்க முடியவில்லை. வெறும் வாய்ச்சொல் அளவில் தான் இந்த காணி விடுவிப்பு என்பது இருந்து கொண்டிருக்கிறதே தவிர, இதுவரை உருப்படியாக காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவர்கள் இராணுவத்தினரிடமும், கடற்படையினரிடமும் இருக்கக்கூடிய காணிகளை இவர்கள் விடுவிப்பார்களா என்ற ஒரு பாரிய கேள்வி எழுந்திருக்கின்றது.
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என்று சொல்லியிருந்தார்கள். இதுவரை
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படுவது பற்றி ஒரு செயலும் இல்லை.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக இதற்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஒரு அலுவலகம் என்பதை கடந்த அரசாங்கம் ஒரு நடவடிக்கை எடுத்திருந்தது, அந்த அலுவலகம் என்பதைத் தவிர, இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் வேறு எந்த நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
அதேபோலத்தான் இந்த உள்ளூராட்சி சபை தேர்தல்களை நாங்கள் நடத்தினோம் என்று பெருமைப்பட கூறுகிறார்கள். உள்ளூராட்சி சபை தேர்தல்கள் நடத்தப்பட்டது என்பது உண்மை. ஆனால், உள்ளூராட்சி சபை தேர்தல்கள் நடத்தப்பட்டு மக்களால் சபைகள் உருவாக்கப்பட்டதற்கு பிற்பாடு,
அரசாங்கம் ‘பிரஜா சக்தி’ என்று சொன்ன ஒரு புதிய விடயத்தை இப்பொழுது முன்னெடுத்திருக்கின்றது.
அந்த பிரஜா சக்தியின் ஊடாகத்தான் கிராமத்தினுடைய வீதிகள் செப்பனிடுவதோ, எந்தெந்த வீதிகள் போடுவது என்று கண்டுபிடிப்பதோ அல்லது மின்சார விளக்குகள் அங்கு பொருத்துவது என்று பார்ப்பதோ போன்ற விடயங்களை இந்த பிரஜா சக்தியினுடைய தீர்மானத்திற்கு இணங்கத்தான் அரசாங்கம் செய்கிறது என்று சொன்னால், இந்த உள்ளூராட்சி சபைகளினுடைய தேவை என்ன?
மக்களால் தெரிவு செய்யப்பட்ட இந்த சபைகளை நீங்கள் முடக்குவதனுடைய நோக்கம் என்ன?அதை புறந்தள்ளி ஓரம் கட்டி இந்த பிரஜா சக்தியினுடைய தேவை என்ன வந்தது என்ற கேள்விகள் எல்லாம் இருக்கின்றது. ஆகவே,
இந்த ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டு இரண்டு வருடங்கள் முடிவடைந்திருக்கக்கூடிய நிலையில், தமிழ் மக்கள் நூற்றுக்கு நூறு வீதம் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்.
எந்த உறுதிமொழிகளும்
நடைமுறைக்கு வரவில்லை, எந்த உறுதிமொழிகளும் செயல்படுத்தப்படவும் இல்லை. இவர்கள் எதிர்காலத்தில் செயல்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையும் இல்லை.
ஆகவே இந்த விடயங்களை
அரசாங்கத்திற்கு தெட்டத்தெளிவாக எடுத்துக்கூறும் முகமாகவும்,
தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் என்ற விடயத்தை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலும்,
வருகின்ற 12-ஆம் திகதி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏனைய எல்லோரையும் சிவில் சமூகங்கள், ஏனைய கட்சிகள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழிற்சங்கங்கள் அனைவரையும் இணைத்து நாங்கள் ஒரு அடையாள உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவதற்கு தீர்மானித்திருக்கிறோம்.
சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை அரசுக்கு எதிரான கண்டனத்தை தெரிவிக்கும் முகமாகவும், அரசாங்கத்தினுடைய இந்த மோசமான நடவடிக்கைகளை வெளிக்கொண்டு வரும் முகமாகவும்,இந்த உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவதாக நாங்கள் தீர்மானித்துள்ளோம்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு, அவர்களது உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் எல்லோரும் இணைந்து அந்த முடிவு எடுத்திருப்பது மாத்திரமல்ல,
இதுதொடர்பாக ஏனைய கட்சிகளுடனும், சிவில் அமைப்புகளையும் சகல தரப்புகளையும் இதில் கலந்து கொள்ளுமாறும் நாங்கள் திறந்த மனதுடன் அவர்களுக்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம் – என்றார்.




