அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்து விளையாடிக் கொண்டிருந்த 8 வயதுச் சிறுவன், தற்செயலாக விசையை அழுத்தியதில் 1 வயது சிறுமி கொல்லப்பட்டதுடன், அந்த சிறுமியின் 2 வயது சகோதரி காயமடைந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் சனிக்கிழமை இரவு எஸ்காம்பியா கவுண்டியில் உள்ள லயன்ஸ் மோட்டலில் நடந்துள்ளது. 8 வயது குழந்தையின் தந்தை ரோட்ரிக் ராண்டால் (45) கைது செய்யப்பட்டார்.
கவனக்குறைவாக இருந்தது, சட்டவிரோதமாகத் துப்பாக்கி வைத்திருந்தது, ஆதாரங்களை மறைத்தது ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டன.
ராண்டல் தனது மகனுடன் ஒரு விடுதியில் அறையெடுத்து, காதலியுடன் தங்கியிருக்கிறார். காதலி தனது 3 பிள்ளைகளுடன் அங்கு வந்திருந்தார்.
ரோட்ரிக் ராண்டால் கைத்துப்பாக்கியை அலுமாரியில் வைத்து விட்டு வெளியில் சென்றுள்ளார். காதலி உறக்கத்தில் இருந்தார்.
8 வயது சிறுவன் துப்பாக்கியை எடுத்து விளையாட்டுத்தனமாக விசைவில்லை அழுத்தியுள்ளார். ஒரு தோட்டா பாய்ந்து, ஒரு வயது பெண் குழந்தை இறந்தது. குழந்தையை துளைத்து சென்ற ரவை, சகோதரியான 2 வயது சிறுமியை காயப்படுத்தியது.
காயமடைந்த சிறுமி விரைவில் குணமடைந்து வருகிறார்.
துப்பாக்கிச் சூடு நடந்ததும் ராண்டால் அறைக்குத் திரும்பி, துப்பாக்கியையும் போதைப்பொருளையும் எடுத்துக் கொண்டு வெளியேறிச் சென்றுவிட்டார். அவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
45 வயதான சந்தேக நபர் 14 முறை தண்டனை பெற்ற குற்றவாளி என்றும், போதைப்பொருள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளிற்காக தண்டனைகள் பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் ஒவ்வோர் ஆண்டும் சிறு பிள்ளைகள் துப்பாக்கியைக் கொண்டு தெரியாமல் சுடுவதால் சராசரியாக 350 மரணங்கள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.




