அறியாமல் ஒரு தவறை செய்து அந்த தவறுக்காக அவரும், அவரது குடும்பமும் பல தடவைகள் மன்னிப்பும் கோரியுள்ள நிலையில் சவூதி அரேபியாவில் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான எஸ்.அனோஜனுக்கு மன்னிப்பு வழங்கி, அவரை விடுதலை செய்து நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அனோஜன் தொடர்பான விடயம் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் மட்டுமல்ல எங்களுக்கும் மிகுந்த வேதனையையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அவரது குடும்பத்தின் துயரத்தை கருத்திற்கொண்டு, மனிதாபிமான அடிப்படையில் இவ்விடயத்தில் தலையீடு செய்து, சவூதி அரேபிய அரசாங்கத்துடன் இராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை தொடர்பான சட்டரீதியான நிலைமைகள், மேல்முறையீட்டு வாய்ப்புகள் மற்றும் மன்னிப்பு கோருவதற்கான நடைமுறைகள் குறித்து உரிய சட்ட ஆலோசனைகளைப் பெற்று, சவூதி அரேபிய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அவருக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கான அனைத்து சாத்தியமான முயற்சிகளையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், இவ்விடயம் தொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, சவூதிக்கான இலங்கைத் தூதரகம், முஸ்லிம் எம்.பிக்கள், ஆளும் தரப்பு மற்றும் எதிர்தரப்பு எம்.பிக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயற்படுவதுடன், அனோஜனின் குடும்பத்தினருக்கு தேவையான தகவல்கள் மற்றும் சட்டரீதியான வழிகாட்டல்களையும் வழங்க வேண்டும்.
இலங்கைப் பிரஜை ஒருவரின் உயிர் மற்றும் எதிர்காலம் தொடர்பான இவ்விடயத்தில் அரசாங்கம் தாமதமின்றி தலையிட்டு, அனோஜனுக்கு மன்னிப்பு கிடைத்து அவர் பாதுகாப்பாக விடுதலை பெற்று நாடு திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என காரைதீவு பிரதேச சபை தவிசாளர் வலியுறுத்தியுள்ளார்.




