பேராசிரியர் ராஜ் சோமதேவவின் இடைக்கால அறிக்கையை முழுமையாக நிராகரிக்கிறோம்- மக்கள் செயல் அமைப்பு

Date:

யாழ் ஊடக அமையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அமைப்பின் பிரதிநிதிகள் இதனை தெரிவித்தனர்.
மேலும் தெரிவிக்கையில்,
பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான தடவியல் தொல்லியல் அகழாய்வு குழுவினர் யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் மனிதஎச்சங்கள் தொகையாக மீட்கப்பட்ட புதைகுழிகள் தொடர்பான தமது மூன்றாவது இடைக்கால அறிக்கையை 2026 ஒக்டோபர் 10ம் திகதியிட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு சமர்ப்பித்துள்ளனர்.
இவ்வறிக்கையின் கண்டறிதற் சுருக்கத்தில் பேராசிரியர் ராஜ் சோமதேவ, செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழிகளின் அகழாய்வுச் சுருக்கத்தை பின்வருமாறு விவரித்துள்ளார்.
இவ்வறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்ட பொருள்சார் ஆதாரங்களின் தொகுப்பு, ஆய்வு செய்யப்பட்ட புதைப்புகளின் தன்மை மற்றும் பண்பு குறித்து தனித்து ஒரு உறுதியான முடிவுக்கு வரப் போதுமானதல்ல.
ஆயினும் கிடைத்த தொல்பொருட்களும் அவற்றுடன் தொடர்புடைய சூழல்சார் ஆதாரங்களும், உலகின் பிற பகுதிகளில் ஆவணப்படுத்தப்பட்ட மறைமுகப்புதைப்புத் தளங்களைவிட, முறையான புதைப்பு நடைமுறைகளால் வகைப்படுத்தப்படும் சூழல்களுடன் இந்தத் தளம் அதிக ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது என்பதைச் சுட்டுகின்றன.
தனித்தனி புதைப்புகள் ஒப்பீட்டளவில் அதிக அடர்த்தியில் காணப்படுவது மட்டும், இறந்தவர்கள் எந்தச் சூழ்நிலையில் புதைக்கப்பட்டனர் என்பதை நிறுவுவதில்லை. இத்தகைய அதிக எண்ணிக்கையிலான புதைப்புகள் ஒரு தொற்றுநோய் அல்லது வேறு வகையான இயற்கைப் பேரிடர் காரணமாக ஏற்பட்டிருந்தால், அவற்றுடன் தொடர்புடைய பொருள்சார் பண்பாட்டு எச்சங்கள் குறைந்த அளவில் இருப்பது எதிர்பாராத ஒன்றாக இருக்க வேண்டியதில்லை.
இவ்வாறான சூழலில் அதிகளவிலான பொருட்காணிக்கைகளையோ தனிப்பட்ட உடைமைகளையோ சேர்த்துப் புதைப்பதைவிட, இறந்தவர்களின் உடல்களை விரைவாக அப்புறப்படுத்துவதே முதன்மைக் கவலையாக இருந்திருக்கலாம். எனவே தொல்பொருட்கள் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதையோ அவற்றின் வகைகள் குறைவாக இருப்பதையோ எந்தவொரு புதைப்புச் சூழலுக்குமான முடிவான சான்றாகக் கருதக்கூடாது.
இந்த அவதானிப்புகள் இன்னும் தற்காலிகமானவை. முழுமையான விளக்கத்திற்கு தொல்லியல் சூழல், மண் அடுக்குகளுக்கிடையிலான தொடர்புகள், புதைப்புகளின் ஒழுங்கமைப்பு, எலும்புக்கூட்டுச் சான்றுகள் மற்றும் உடன் கிடைத்த தொல்பொருட்களால் வழங்கப்படும் காலவரிசைத் தகவல்கள் ஆகியவற்றை ஒன்றிணைத்த ஆய்வு தேவைப்படுகிறது.
எனவே இந்தப் புதைப்புகளின் சூழ்நிலைகள், நோக்கம் அல்லது வரலாற்றுப் பின்னணி குறித்து முடிவுகள் எடுப்பதற்கு முன் கிடைத்த ஆதாரங்கள் கவனமாக மதிப்பிடப்பட வேண்டும். ஃஃ
பேராசிரியர் ராஜ் சோமதேவ’வின் இந்த மூன்றாவது இடைக்கால அறிக்கை, செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழித்தளங்கள், ‘முறையான புதைப்பு நடைமுறைகளால் வகைப்படுத்தப்படும் சூழல்களுடன் இந்தத் தளம் அதிக ஒற்றுமைகளைக் கொண்டுள்ள இடுகாடு’ என்கிற முன்முடிவுக்குள் மீட்கப்பட்ட மனித எச்சங்களையும், அவற்றின் பின்னால் திரண்டெழுந்த தமிழின அழிப்புக்கான நீதிக்கோரிக்கைகளையும் புதைத்தொழிக்க முயன்றிருக்கின்றது. இந்நிலையில் பேராசிரியர் ராஜ் சோமதேவ’வின் சித்துப்பாத்தி பற்றிய மூன்றாவது இடைக்கால அறிக்கையை ‘மக்கள் செயல்’ ஆகிய நாம் முழுமையாக நிராகரிப்பதுடன், ஊகங்களின் மீது கட்டப்பட்டுள்ள ஒருபக்க சார்பானதென வன்மையாக கண்டிக்கின்றோம்.
செம்மணி சித்துப்பாத்தி மயானம், யாழ்ப்பாண மாவட்டத்தின் அரியாலை எனும் ஊரின் எல்லையிலுள்ள சைவர்களின் எரிகாடு எனும் வகைக்குரிய ஒரு நிகழ்விடம் என்பதையும் தாண்டி, 1995 பிற்பகுதியில் யாழ்ப்பாண குடாநாடு முழுமையாக இலங்கை அரச படைகளினால் கைப்பற்றப்பட்டு முழுமையான இராணுவ அடக்குமுறை நிலவிய சுமார் பத்தாண்டு காலப்பகுதிக்கு யாழ்ப்பாண நகரின் எல்லையில் இருந்த கொடூரமான இராணுவ சோதனைச்சாவடியின் மிக அருகிலுள்ள ஒரு மயானபூமி என்பதை தொல்லியல் குழுவினர் மிக வசதியாக மறந்தும் – மறைத்துமுள்ளனர்.
இவ்வறிக்கையின் முடிவுகளை எட்டுவதற்கு பேராசிரியர் தலைமையிலான குழுவினர் : மண் அடுக்கியல், அடையாளம் காணப்பட்ட தனிநபர் எச்சங்கள், உடற்கூற்று இணைப்பு இழந்த மனித எலும்புகளின் திரட்சிகள், மண்டையோடுகள் திசையமைவு, கைகள் அமைந்துள்ள நிலை, எலும்புக்கூடுகளின் செங்குத்துப்பரவல், எலும்புக்கூடுகளின் கிடைமட்ட பரவல், ஆடைகள், தொல்பொருட்கள், மீட்கப்பட்ட நாணயங்கள் அச்சிடப்பட்ட ஆண்டுகள், நிலத்தில் ஊடுருவும் ரேடார் ஆய்வு போன்ற துணைத்தலைப்புக்களின் கீழ் தமது தொல்லியல் அறிவை பிரயோகித்துள்ளதாக நிறுவியுள்ளனர். விசேடமாக அமர்ந்த நிலையில் மீட்கப்பட்ட மனித எச்சமானது ஜீவசமாதி நிலையில் முறையாக இறுதிச்சடங்குடன் புதைக்கப்பட்ட உடலுக்குரியதாயிருக்கலாம் என்பதும் அறிக்கையின் ஒரு பகுதியாயிருக்கின்றது.
தமிழின அழிப்பின் ஒரு அங்கமாக தமிழினப் பண்பாட்டு அழிப்பை பிரதான வேலைத்திட்டமாக கைக்கொண்டுள்ள இலங்கையின் தொல்லியல் அரச திணைக்களத்துடன் மிக நெருங்கிய தொடர்பிலுள்ள அகழ்வாய்வு அறிஞர்கள் வேண்டுமென்றே தவற விட்டிருக்கின்றனவான :
• மனித எச்சங்களில் காணப்படும் இறப்பின் போதான காயங்கள்,
• இறப்பின் பின்னர் இம்மனித எச்சங்களுக்குரிய உடல்கள் கையாளப்பட்ட முறைகள்,
• ஆடைகளும் அணிகலன்களும் அகற்றப்பட்டு புதைக்கப்பட்டுள்ள முறை,
• மீட்கப்பட்ட எச்சங்களில் காணப்படும் துன்புறுத்தல் அல்லது வன்கொலைக்கான தடயங்கள்,
• ஒரே நேரத்தில் புதைக்கப்பட்ட உடல்கள்,
• ஒரே குழியில் புதைக்கப்பட்ட உடல்கள்,
• சித்துப்பாத்தி மயானத்தின் அருகிலிருந்த இராணுவ சித்திரவதை முகாம்கள்,
• சித்துப்பாத்தி மயானத்தின் அருகிலிருந்த இராணுவ காவலரண்கள்,
• சித்துப்பாத்தி மயானத்தின் மிக அருகிலுள்ள செம்மணி மயானத்தில் மீட்கப்பட்ட கிருஷாந்தி மற்றும் குடும்பத்தினரின் எச்சங்கள்,
• வன்புணர்ந்து கொல்லப்பட்ட கிருஷாந்தி மற்றும் குடும்பத்தினரின் மீதான படுகொலை வழக்கு,
• 1995ற்கு பின்னான காலத்துக்குரிய யாழ்ப்பாண மாவட்டத்தில் இனங்காணப்பட்ட மனிதப்புதைகுழி வழக்குகள்
ஆகிய தலைப்புகளின் கீழ் இந்த அகழ்வாய்வு அறிக்கை சற்றும் தொடர்புபடாமலிருப்பது வலுவாக சந்தேகமளிக்கின்றது.
மேலும், சித்துப்பாத்தி மயானத்தில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்புபட மிக நெருக்கமான சந்தர்ப்பங்களை கொண்டுள்ள – 1995 முதல் 2010 வரையான யாழ்ப்பாண குடாநாட்டின் காணாமலாக்கப்பட்டோர் பற்றிய முறைப்பாடுகள், 1995 முதல் 2006 வரையான நெருக்கடியான சிவில் நிர்வாகமில்லாத இராணுவ வல்வளைப்பின் கீழ் யாழ்ப்பாணத்தில் காணாமலாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டோர், துணை இராணுவ குழுக்களால் படுகொலை செய்யப்பட்டோர், வீதிப்பயணத்தின் போது காணாமலாக்கப்பட்ட பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அரச பணியாளர்கள், ஊரடங்கு அமுலாகும் வேளைகளை அண்மித்து நடமாடிய அன்றாடம் உழைத்துண்பவர்கள், இராணுவ சிவில் தொடர்பு காரியாலயங்களுக்கு அனுமதிப்பத்திரம் பெற சென்று வீடு திரும்பாத பெண்கள், இனந்தெரியாதவர்களால் வீடுகளுக்கு சென்று ஆயுதமுனையில் கடத்தப்பட்டவர்கள், ‘பீல்ட்-பைக் குரூப்” என பிரசித்தமான இராணுவ மோட்டார்சைக்கிள் படையணியினரால் தூக்கிச்செல்லப்பட்ட இளைஞர்கள் யுவதிகள் பற்றியும், இன்று வரை அவர்களின் உயிரற்ற உடல்களோ உடல் எச்சங்களோ மீட்கப்படாமல் இருப்பது பற்றியும் மனிதப்புதைகுழிகளுக்கான நீதி விசாரணைகளுடன் தொடர்புபடுத்துவது யார்? அல்லது எந்த அறிக்கை? என்ற இரத்தக்கறை படிந்த கேள்வி, எம் எல்லோர் முன்பாகவும் விரிக்கப்பட்டுள்ளது.
‘அகழப்படுகின்ற குழிகளில் இருந்து வெளிவரும் உயிரற்ற எச்சங்களும் – இணைந்து மீட்கப்படும் பொருட்களையும் மட்டும் வைத்து முடிவுக்கு வரும் களமல்ல, செம்மணி’ என்பதும் ‘இலங்கை அரசின் உள்ளக பொறிமுறைகள் மூலம் செம்மணி உள்ளிட்ட ஏனைய தமிழின அழிப்பு கொடூர படுகொலை நிகழ்விடங்களின் மறைக்கப்பட்ட அநியாய படுகொலைகளுக்கான நீதி கிட்டப்போவதில்லை’ என்பதும் ராஜ் சோமதேவ குழுவினரின் இடைக்கால அறிக்கை மூலம் மீண்டும் ஒருமுறை எமது செவிகளில் அறைந்து சொல்லப்பட்டிருக்கின்றது.
பேராசிரியர் ராஜ் சோமதேவ’வின் மூன்றாவது இடைக்கால அறிக்கையை ஏன் முற்றாக நிராகரிக்கின்றோம்?
• இதற்கு முந்தைய மூன்று அறிக்கைகளிலும் ‘மனிதப் புதைகுழி’ என்ற சொற்பதத்தைப் பயன்படுத்தி வந்த பேராசிரியர் ராஜ் சோமதேவ, தற்போதைய இடைக்கால அறிக்கையில் வலிந்து அப்பதத்தைத் தவிர்த்திருப்பதானது, இவ்விடைக்கால அறிக்கையின் துல்லியத்தன்மை மற்றும் செல்லுபடித்தன்மை தொடர்பில் அதீத சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
• “சித்துப்பாத்தி மயான புதைகுழியில் புதைக்கப்பட்டுள்ள உடல்களின் எண்ணிக்கையை மிக அதிகமாக இருப்பதன் காரணமாக தொற்றுநோயினாலோ அல்லது இயற்கை அனர்த்தத்தினாலோ உயிரிழந்தவர்களின் உடல்களாக இருக்கக்கூடுமோ எனும் கேள்வியுடன், உடல்களை விரைவாக அடக்கம் செய்வதே பிரதான விடயமாக இருந்திருக்கலாம்” என குறிப்பிடுவதன் மூலம், தொல்லியல் குழுவினர் மீட்கப்பட்ட எச்சங்களின் மரணத்துக்கான காரணங்களை குறிப்பிட்ட வரையறைக்குள் நிறுத்துவதற்கு வலிந்து முயன்றிருக்கிறார்கள்.
• எச்சங்களின் புதைவு ஆழம், பரவல், அடுக்குநிலை போன்ற தடயவியல் சார் ஏதுக்களை தாண்டியும், ‘சாதாரண அடக்கம்’ என்பதாக இடைக்கால அறிக்கையில் முன்மொழியப்பட்டுள்ள விளக்கமானது, சைவ ஃ இந்து தமிழ்மக்களின் தகன நம்பிக்கைகளுக்கு முழுமையாக மாற்றாக காணப்படுகின்றது. மிக விசேட சந்தர்ப்பங்களில் சைவ ஃ இந்து தமிழ்மக்கள் இறந்தவர்களை அடக்கம் செய்கின்ற போதிலும் அக்குழிகள் சராசரியாக ஐந்தடி ஆழமுடையவை. சித்துப்பாத்தி புதைகுழிகளில் முக்கால் மீட்டரை விட குறைவான ஆழத்திலிருந்தும் எச்சங்கள் மீட்கப்பட்டிருப்பதையும், குழுவினர் சாதாரண அடக்கமாக பொதுமைப்படுத்தியுள்ளனர்.
• ஒரே குழியில் மீட்கப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட எச்சங்கள், ஒரே குழியில் மீட்கப்பட்ட வெவ்வேறு வயதுடைய எச்சங்கள், ஒரே குழியில் மீட்கப்பட்ட எச்சங்களின் வெவ்வேறான படுக்கை நிலை, ஒரே குழியில் மீட்கப்பட்ட ஒன்றுக்கொன்று தொடர்பற்ற சான்றுப்பொருட்கள் போன்ற விடயங்களை சற்றும் தொடர்புபடுத்தாமல் ‘சாதாரண அடக்கம்’ எனும் பொதுமைப்படுத்திய முடிவுக்கு தொல்லியல் குழுவினர் வந்திருப்பது, முற்றிலும் பக்கச்சார்பானதாகும்.
• மனித எச்சங்களுடன் இணைத்து மீட்கப்பட்ட நாணயங்கள் மற்றும் பிற பொருட்கள் மூலம் எச்சங்களை இனங்காண்பதற்கான வாய்ப்புக்களை, தொல்லியல் குழுவினர் முயற்சிக்க தவறியுள்ளனர். உலோக எச்சங்கள் குறிப்பாக நாணயங்களின் உற்பத்தி ஆண்டினை முன்னிலைப்படுத்தி குறிப்பிட்டுள்ளதானது, இலங்கை அரசின் பிரகடனப்படுத்தப்படாத பொருளாதார தடை நடைமுறையிலிருந்த யாழ்ப்பாண குடாநாட்டில் இவ்வாறான நாணய குற்றிகள் பயன்பாட்டிலிருந்த காலத்தொடர்ச்சியை கவனத்திலெடுக்காமல் மேம்போக்காக அறிக்கையிட்டிருப்பதற்கான வலுவான உதாரணமாகும்.
• ‘விரைவான அடக்கம் எனும் தேவைக்கு பயன்பட்டுள்ள குழிகள்’ எனும் பொருள்படும் இடைக்கால அறிக்கையின் நிறுவல்களில், விரைவான அடக்கத்துக்கு அவசியம் ஏற்பட்டிருக்க கூடிய தொற்றுநோய் அல்லது இயற்கை பேரிடர் பற்றி 1829 முதலான வரலாற்றை கொண்ட யாழ்ப்பாண கச்சேரி ஃ மாவட்ட நிர்வாக கட்டமைப்பிலோ அல்லது 1833 இலிருந்து கோல்புறூக்-கமரூன் சீர்திருத்தத்துடன் ஆரம்பிக்கின்ற இலங்கையின் அரசியலமைப்பு கட்டமைப்பிலோ ஆவண ஆதாரமற்ற தொற்றுநோய் இறப்புகள் அல்லது பேரிடர் மரணங்கள் முரணேற்படுத்துவதை, எந்த வாய்ப்பிலும் கவனிக்கவில்லை.
பொதுமக்களின் வரிப்பணத்தில் சம்பளம் உட்பட ஏனைய கொடுப்பனவுகளை தடங்கலின்றி பெற்றுள்ள தடவியல் ஆய்வுக்குழுவினர், பொதுமக்களின் நீண்டகால நீதிக்கான கோரிக்கைகளுக்கு விசுவாசமாயிருப்பதற்கு பதிலாக அரசியல் நோக்கிலும், சிறுபான்மை மக்களை அடக்கியொடுக்குவதை வழக்கமாக கொண்ட கட்டமைக்கப்பட்ட அரச இயந்திரங்களின் விருப்பங்களை பிரதிபலிக்கும் அரச நிர்வாக துணைக்குழுவாக தம்மை வெளிப்படுத்தியிருப்பதை, தமிழ்த்தேசிய மக்கள் சார்பில் வலிதாக கண்டிக்கின்றோம். செம்மணி – சித்துப்பாத்தி மனிதப்புதைகுழிகள் தொடர்பில், பேராசிரியர் ராஜ் சோமதேவ’வின் குழுவினரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மூன்றாவது இடைக்கால அறிக்கை உட்பட முன்னைய அறிக்கைகளிலும் சுட்டப்பட்டுள்ள நிரூபிக்கப்படாத சர்ச்சைக்குரிய ஊகங்களின் அடிப்படையிலான முடிவுகள், உறுதியானவையாக கருதப்படுவது அடியோடு தவிர்க்கப்பட வேண்டும் என தமிழ்த்தேசிய மக்களாக மிகுந்த அவதானத்துடன் வலியுறுத்துகின்றோம்.
 சித்துப்பாத்தியில் மீட்கப்பட்டுள்ள மனித எச்சங்கள் மீதான கார்பன்-காலவியல் பரிசோதனைகள் எடுகோள் மாதிரி சோதனைக்கு உட்படுத்தப்படுவதற்கு பதிலாக சித்துப்பாத்தியில் மீட்கப்பட்ட எச்சங்கள் முழுவதும் சர்வதேச மேற்பார்வை பொறிமுறையொன்றின் கீழ் உலகளாவிய நியமங்களின் படி கார்பன்-காலவியல் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என மக்கள் செயல் குறிப்பாக வலியுறுத்துவதுடன், தேவையேற்படின் இலங்கை அரசின் வரவு செலவுத்திட்ட ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக இச்செலவீனங்களை பொறுப்பேற்கவும் உலகத்தமிழ் மக்கள் தயாராயிருப்பதையும் இவ்விடத்தில் வெளிப்படுத்துகின்றோம்.
செம்மணி மனித புதைகுழிகள் பற்றிய நீதிவிசாரணைகள் மற்றும் அவற்றிற்கு முன்னரான மதிப்பாய்வுகள் அல்லது மேலதிக தடயவியல் தொல்லியல் பரிசோதனைகள் சுயாதீனமான சர்வதேச நிபுணர் குழுக்களினால் உரியவகையில் மேற்பார்வையுடன் தலையீடு செய்யப்பட வேண்டுமெனவும், இம்மனித புதைகுழிகளில் மீட்கப்பட்டுள்ள எச்சங்கள் மீதான கார்பன்-காலவியல் பரிசோதனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச நியமங்களின் அடிப்படையில் மாதிரி தெரிவுகளுக்கு அப்பால் முழுமையாக நிகழ்த்தப்பட வேண்டுமெனவும், தமிழின படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களின் உடலங்கள் மறைக்கப்பட்டுள்ள செம்மணி உள்ளிட்ட ஏனைய மனித புதைகுழிகள் தொடர்பிலான நீதிவிசாரணைகளுக்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தலையீட்டுடன் நீதியான சர்வதேச விசாரணை பொறிமுறையொன்று உடனடியாக உருவாக்கப்பட வேண்டும் எனவும் தமிழ்த்தேசிய மக்கள் சார்பில் வலியுறுத்தி நிற்கின்றோம் – என்றுள்ளது.
spot_imgspot_img

More like this
Related

ஹோர்முஸ் நீரிணையில் 3 எண்ணெய் கப்பல்கள் எரிகின்றன: ஈரான் புரட்சிகர காவல்படை

ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) கப்பல்கள் செல்லும்போது கண்ணிவெடிகளில் மோதியதில்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான யாழ் வாசி பிணையில் விடுதலை!

தமிழகத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து...

ரகித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனான ரகித ராஜபக்ஷவுக்குச் சொந்தமான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்