தமிழகத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 50 வயதுடைய நபர், இன்று (29) மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து சொந்தப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், மாசியப்பிட்டி அம்மன் கோவிலடியைச் சேர்ந்த கந்தசாமி கிருஷ்ணகுமார் என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவராவார்.
கடந்த 26ஆம் திகதி தமிழகத்திலிருந்து விமானம் மூலம் இலங்கை திரும்பியபோது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவர் கடந்த 2015ஆம் ஆண்டு தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு, ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்திருந்தார். பின்னர் திருச்சி சிறப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தாயகம் திரும்பியிருந்தார்.
இவருக்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட அவர் சொந்தப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் 12.11.2026 அன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.




