சாய்ந்தமருது வொலிவேரியன் பிரதேச மக்களின் நீண்டகாலக் கோரிக்கைக்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் நேரடித் தலையீட்டில் அப்பிரதேசத்தின் பிரதான பாதை சீரமைக்கப்பட்டு வருவதுடன், மக்களின் நீண்டநாள் துயரத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தின் பிரதான பாதை கடுமையான முறையில் சரிவடைந்து சேதமடைந்திருந்த காரணத்தினால், அப்பகுதி மக்கள், பாடசாலை மாணவர்கள், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடந்த காலங்களில் பல்வேறு அசௌகரியங்களையும் துயரங்களையும் எதிர்கொண்டு வந்தனர். அத்துடன் தினசரிப் போக்குவரத்தும் பெருமளவில் பாதிப்படைந்திருந்தது.
பிரதேச மக்களின் இந்த அவல நிலையையும் இன்னல்களையும் நேரில் உணர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா, இது தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்று துரித நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
அவரது தொடர்ச்சியான முயற்சியின் பலனாக, தற்போது குறித்த வொலிவேரியன் பிரதான வீதியினைப் புனரமைத்து அமைக்கும் பணிகள் மிக தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நீண்டகாலமாக நிலவி வந்த போக்குவரத்துப் பிரச்சினைக்குத் துரித தீர்வு கண்டு வீதியமைக்கும் பணிகளை ஆரம்பித்து வைத்த பாராளுமன்ற உறுப்பினருக்குப் பிரதேச பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தமது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.




