பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்ததுடன், பொதுவெளியில் அதிகம் தலைகாட்டாமல் மறைந்திருந்து தனது குற்றச் சாம்ராஜ்யத்தை இயக்கி வந்த போதைப்பொருள் உலகின் முக்கிய தலைவர்களில் ஒருவரின் ஆதிக்கம், 2026 நவம்பர் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவுடன் முடிவுக்கு வந்துள்ளது.
அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பணியகமான FBI இன் மிகவும் தேடப்படும் முதல் 10 குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றிருந்த ஃபாஸ்டோ இசிட்ரோ மேசா ஃபுளோரஸ் (Fausto Isidro Meza Flores) எனப்படும் ‘எல் சாப்போ இசிட்ரோ’ (El Chapo Isidro), மெக்சிகோவின் சினலோவா மாநிலத்திலுள்ள குவாசாவே (Guasave) நகரில் அந்நாட்டு இராணுவத்தின் சிறப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும், இந்தக் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து வெடித்த வன்முறைகள் காரணமாக ஒட்டுமொத்த சினலோவா மாநிலமும் போர்க்களமாக மாறியது. இதில் நான்கு இராணுவ வீரர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரகசிய உளவுத் தகவலின் அடிப்படையில் அதிரடிக் கைது
அமெரிக்க மற்றும் மெக்சிகோ புலனாய்வு அமைப்புகள் இணைந்து மேற்கொண்ட தகவல் பரிமாற்றத்தின் மூலம், மேசா ஃபுளோரஸ் மறைந்திருந்த இடம் துல்லியமாக அடையாளம் காணப்பட்டது.
இதனையடுத்து, மெக்சிகோ இராணுவத்தின் ‘முர்சியேலாகோஸ்’ (Murciélagos) மற்றும் தேசிய பாதுகாப்புப் படையின் ‘லோபோஸ்’ (Lobos) ஆகிய சிறப்புப் படைப் பிரிவுகள் இணைந்து, குவாசாவே நகரிலுள்ள வீடொன்றை மிகவும் இரகசியமான முறையில் சுற்றிவளைத்தன.
பாதுகாப்புப் படையினர் அந்த வீட்டைச் சுற்றிவளைத்தவுடன், உள்ளே இருந்த ஆயுதம் ஏந்திய குழுவினர் துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிபொருட்களைப் பயன்படுத்தி கடுமையான எதிர்த்தாக்குதலை முன்னெடுத்தனர்.
இதனையடுத்து, வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த சிறப்புப் படையினர், 44 வயதான மேசா ஃபுளோரஸுடன் மேலும் இருவரைக் கைது செய்தனர்.
அவர்களில் ஒருவர், அவரது உறவினரும் அந்தக் குற்றக் குழுவின் இரண்டாம் நிலைத் தலைவராகக் கருதப்படுபவருமான ‘செராஃபின்’ (Serafín) என்ற புனைப்பெயரால் அறியப்படும் ஜெர்மான் என் (Germán N) ஆவார்.
மற்றையவர், அந்த அமைப்பின் நிதி நடவடிக்கைகளைக் கையாள்பவர் எனச் சந்தேகிக்கப்படும் அவரது மைத்துனரான ஹோசே என் (José N) ஆவார்.
11 பேர் உயிரிழப்பு – ஆயுதங்கள், போதைப்பொருட்கள் மீட்பு
இந்த நடவடிக்கையின்போது ஆதரவுப் படையினராகப் பணியாற்றிய நான்கு மெக்சிகோ இராணுவ காலாட்படை வீரர்கள் உயிரிழந்தனர்.
அதேவேளை, பாதுகாப்புப் படையினருடன் மோதலில் ஈடுபட்ட ஆயுதக் குழுவைச் சேர்ந்த ஏழு உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர்.
இந்த நடவடிக்கையின்போது மொத்தம் எட்டுச் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் முக்கியமான மூன்று சந்தேகநபர்களும் நவம்பர் 21ஆம் திகதி அதிகாலை சுமார் 5.20 மணியளவில் மெக்சிகோ விமானப்படை விமானம் மூலம் மெக்சிகோ நகருக்குக் கொண்டு செல்லப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான விசேட சட்டமா அதிபர் அலுவலகமான FEMDO / SEIDO விடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ஏனைய ஐந்து சந்தேகநபர்களும் குலியாகானில் (Culiacán) அமைந்துள்ள சட்டமா அதிபர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கைது நடவடிக்கை இடம்பெற்ற இடத்திலிருந்து .50 கலிபர் வகைத் துப்பாக்கி, கைக்குண்டுகளை வீசும் சாதனம், கைக்குண்டுகள், ஏனைய துப்பாக்கிகள், போதைப்பொருட்கள் மற்றும் பெருமளவிலான பணம் ஆகியவற்றையும் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், மேசா ஃபுளோரஸை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கான உத்தரவும் நிலுவையில் உள்ளது.
சினலோவா மாநிலம் முழுவதும் வெடித்த வன்முறை
தமது தலைவன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த ஆயுதக் குழு உறுப்பினர்கள், சினலோவா மாநிலம் முழுவதும் பாரிய எதிர்த்தாக்குதல்களை முன்னெடுத்தனர்.
லொஸ் மோச்சிஸ், குவாசாவே, குவாமுச்சில், நவோலாட்டோ, அஹோமே மற்றும் குலியாகான் ஆகிய நகரங்களுக்குச் செல்லும் பிரதான வீதிகள் முடக்கப்பட்டன.
குறிப்பாக, மெக்சிகோ 15 நெடுஞ்சாலை மற்றும் ‘லா கொஸ்டேரா’ வீதிகளில் பாரவூர்திகள் உள்ளிட்ட வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்டதுடன், அவற்றைப் பயன்படுத்தி வீதித் தடைகளும் அமைக்கப்பட்டன.
மேலும், வீதிகளில் கூர்மையான ஆண்கள் பொருத்தப்பட்ட தடுப்புகள் அமைக்கப்பட்டதுடன், வாகனங்களும் கடத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் பலர் வீதிகளிலேயே சிக்கிக்கொண்டனர்.
இதேவேளை, இராணுவ ஹெலிகொப்டர்கள் வானிலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்திய காட்சிகளும் பதிவாகியுள்ளன.
இந்த வன்முறைகளால் அப்பகுதிகளின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டது.
குவாசாவே நகரிலுள்ள குரோடா பூங்காவில் நடைபெற்றுக்கொண்டிருந்த பேஸ்பால் போட்டியின்போதும் அருகிலுள்ள பகுதிகளில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டன.
இதனால் அச்சமடைந்த வீரர்களும் பார்வையாளர்களும் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக அங்கிருந்து சிதறி ஓடினர். இதனையடுத்து போட்டி இடைநிறுத்தப்பட்டது.
சனிக்கிழமைக்குள் வீதித் தடைகள் அகற்றப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மாநில அரசாங்கம் அறிவித்தது.
எனினும், இந்தச் சம்பவம், கடந்த காலங்களில் சினலோவா மாநிலத்தின் முக்கிய போதைப்பொருள் தலைவர்கள் கைது செய்யப்பட்டபோது வெடித்த ‘குலியாகனாசோ’ (Culiacanazo) எனப்படும் வன்முறைச் சம்பவங்களை மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது.
யார் இந்த எல் சாப்போ இசிட்ரோ?
1982 ஜூன் 19ஆம் திகதி சோனோரா மாநிலத்தின் நவோஹோவா பகுதியில் பிறந்த மேசா ஃபுளோரஸ், 1990களில் பழைய இரும்பு வியாபாரியாகவும் சிறிய அளவிலான தொழில் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தார்.
பின்னர், ஹுவாரெஸ் போதைப்பொருள் கடத்தல் அமைப்பின் தலைவரான அமாடோ கரில்லோ ஃபுவென்டெஸ் (Amado Carrillo Fuentes) தலைமையிலான குழுவின் ஊடாகக் குற்ற உலகில் நுழைந்தார்.
1997ஆம் ஆண்டு கரில்லோ உயிரிழந்ததைத் தொடர்ந்து, பெல்ட்ரான் லெய்வா (Beltrán-Leyva) அமைப்பில் இணைந்தார்.
அங்கு அல்ஃப்ரெடோ பெல்ட்ரான் லெய்வா மற்றும் பின்னர் ஹெக்டர் பெல்ட்ரான் லெய்வா ஆகியோரின் நம்பிக்கைக்குரிய நபராகவும், அவர்களின் முக்கியக் கூலிப்படைக் கொலையாளியாகவும் செயல்பட்டார்.
2008ஆம் ஆண்டு அல்ஃப்ரெடோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ‘எல் சாப்போ’ குஸ்மானின் சினலோவா குழுவுடன் ஏற்பட்ட கடுமையான மோதலால் பெல்ட்ரான் லெய்வா அமைப்பில் பிளவு ஏற்பட்டது.
இதன் பின்னர் அந்த அமைப்பில் தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்திக்கொண்ட மேசா ஃபுளோரஸ், ‘லொஸ் மசாட்லெகோஸ்’ (Los Mazatlecos) எனப்படும் மேசா-ஃபுளோரஸ் அமைப்பின் தலைவராக உருவெடுத்தார். இந்த அமைப்பு ‘குவாசாவே கார்டெல்’ என்றும் அழைக்கப்படுகிறது.
20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த போதைப்பொருள் சாம்ராஜ்யம்
வடக்கு சினலோவா பிராந்தியத்திலுள்ள குவாசாவே, அஹோமே, லொஸ் மோச்சிஸ், எல் ஃபுவேர்டே மற்றும் சொய்க்ஸ் ஆகிய பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் வழித்தடங்களையும் போதைப்பொருள் உற்பத்தி ஆய்வகங்களையும் மேசா ஃபுளோரஸ் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹெரோயின், மெத்தம்பெட்டமைன், கொக்கைன், கஞ்சா மற்றும் ஃபெண்டானில் உள்ளிட்ட போதைப்பொருட்களை டன் கணக்கில் அமெரிக்காவுக்குக் கடத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், பொலிஸார் மற்றும் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினரைக் கொலை செய்தல், போட்டிக் குழுவினரைக் கொலை செய்தல், ஆட்கடத்தல், கப்பம் கோருதல் மற்றும் சித்திரவதை செய்தல் போன்ற குற்றங்களுடனும் அவர் தொடர்புபடுத்தப்பட்டுள்ளார்.
2010ஆம் ஆண்டு சோனோரா மாநிலத்தின் டுபுட்டாமா பகுதியில் இடம்பெற்ற பதுங்கித் தாக்குதலில் பல டஜன் பேர் கொல்லப்பட்ட சம்பவத்திலும், 2011ஆம் ஆண்டு குலியாகானில் சடலங்கள் எரிக்கப்பட்ட சம்பவங்களிலும் அவருக்குத் தொடர்பிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன.
‘எல் சாப்போ’ குஸ்மானைப் போன்று பொதுவெளியில் அதிகம் தலைகாட்டாமல், குறைந்த கவனத்துடன் தனது நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்ததால், இதற்கு முன்னரும் மெக்சிகோவில் கைது செய்யப்பட்டிருந்த போதிலும், பத்து ஆண்டுகளுக்கும் மேலாகச் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்திருக்க முடிந்தது.
இதேவேளை, இஸ்மாயில் ‘எல் மாயோ’ சம்பாடா (Ismael ‘El Mayo’ Zambada) கைது செய்யப்பட்ட பின்னர், 2024ஆம் ஆண்டு முதல் சினலோவா கார்டெல் அமைப்பின் ‘லொஸ் மாயோஸ்’ மற்றும் ‘லொஸ் சாப்பிட்டோஸ்’ ஆகிய இரு பிரிவுகளுக்கும் இடையில் உள்மோதல் தீவிரமடைந்தது.
இந்த மோதலின்போது, மேசா ஃபுளோரஸின் அமைப்பு ‘லொஸ் மாயோஸ்’ தரப்புடன் கூட்டணி அமைத்துச் செயற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் மிகவும் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றவர்
அமெரிக்க அரசாங்கம் சினலோவா கார்டெல் அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட்டுள்ளது.
மேசா ஃபுளோரஸுக்கு எதிராக 2012 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
2017ஆம் ஆண்டு முதல், அவரைப் பற்றிய தகவல்களை வழங்குபவர்களுக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை வெகுமதி வழங்கப்படும் என அறிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, 2025 பெப்ரவரி 4ஆம் திகதி FBI இன் மிகவும் தேடப்படும் முதல் 10 குற்றவாளிகள் பட்டியலில் 533ஆவது நபராக அவர் பெயரிடப்பட்டார்.
ஃபெண்டானில் உள்ளிட்ட போதைப்பொருட்களின் கடத்தலைக் கட்டுப்படுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் மெக்சிகோவுக்கு அதிக அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், ஜனாதிபதி கிளோடியா ஷெயின்பாம் (Claudia Sheinbaum) தலைமையிலான மெக்சிகோ அரசாங்கம் போதைப்பொருள் கடத்தல் குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இவ்வாறான சூழலில் இடம்பெற்றுள்ள எல் சாப்போ இசிட்ரோவின் கைது நடவடிக்கை, பெல்ட்ரான் லெய்வா அமைப்பு, மேசா-ஃபுளோரஸ் போதைப்பொருள் வலையமைப்பு மற்றும் ‘லொஸ் மாயோஸ்’ கூட்டணி ஆகியவற்றுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.




