மாத்தளை பொலிஸ் நிலையத்தின் தடுப்புக் காவல் அறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது திடீரென நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தேகநபர் உயிரிழந்தமைக்கு, அதிகளவு போதைப்பொருள் பயன்படுத்தியதே காரணம் எனப் பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் கண்டி, அம்பிட்டிய, திலனாகம பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் ஆவார். ஐஸ் போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவர், மாத்தளை பொலிஸ் நிலையத்தின் தடுப்புக் காவல் அறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், கடந்த 20ஆம் திகதி அதிகாலை பொலிஸ் காவலில் இருந்தபோது திடீரென நோய்வாய்ப்பட்டுள்ளார். இதனையடுத்து, சிகிச்சைக்காக மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதிகாலை 12.45 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் மேலும் ஒரு அதிர்ச்சித் தகவலாக, பிரேதப் பரிசோதனையின் போது உயிரிழந்தவரின் சடலத்திற்கு அருகில் ஐஸ் போதைப்பொருள் அடங்கிய பொட்டலம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
மாத்தளை பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த சந்தேகநபர் – அதிகளவு ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்தியதே காரணம்!
Date:




