முன்னாள் ஜனாதிபதிகள் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களுக்காக அரச நிதியிலிருந்து செலவிடப்பட்ட தொகைகள் தொடர்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (27) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வின் போது இது தொடர்பில் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, மஹிந்த ராஜபக்ஷ 2010 முதல் 2014 வரையான காலப்பகுதியில் 3,572 மில்லியன் ரூபாயையும், மைத்திரிபால சிறிசேன 2015 முதல் 2019 வரையான காலப்பகுதியில் 384 மில்லியன் ரூபாயையும், கோட்டாபய ராஜபக்ஷ 2020 முதல் 2022 வரை 126 மில்லியன் ரூபாயையும், ரணில் விக்கிரமசிங்க 2023 மற்றும் 2024 காலப்பகுதியில் 533 மில்லியன் ரூபாயையும் செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அநுர குமார திசாநாயக்க 2024 செப்டம்பர் முதல் 2025 பெப்ரவரி வரை 1.8 மில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை வெளிநாட்டு பயணங்களுக்காக பயன்படுத்தப்பட்ட அரச நிதி குறித்து மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், எதிர்காலத்தில் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவினங்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்கள் இந்த செலவினங்களை கேள்விக்குள்ளாக்கியதோடு, இது தொடர்பில் அரச தரப்பினரின் விளக்கமும் நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.