கல்முனையில் 12 கிலோ 230 கிராம் கேரளா கஞ்சா மற்றும் 5.9 இலட்சம் பணத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்முனை விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, பெருமளவிலான கேரளா கஞ்சா மற்றும் பணத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதன்கிழமை (5) அதிகாலை இரு வேறு இடங்களில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 54 மற்றும் 62 வயதான இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீண்டகாலமாக இவர்கள் கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, நற்பிட்டிமுனை உள்ளிட்ட பகுதிகளில் கேரளா கஞ்சா விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
கைதானவர்களில் ஒருவர் பெரிய நீலாவணை அக்பர் வீதியைச் சேர்ந்த பிரபல கைக்கடிகாரம் திருத்தும் நபராகவும், மற்றைய நபர் கல்முனை நகரில் பிரபல ஆடையகத்தை நடத்தி வந்தவராகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களிடம் இருந்து 12 கிலோ 230 கிராம் கேரளா கஞ்சா, 5 இலட்சம் 90 ஆயிரம் ரூபாய் பணம், மோட்டார் சைக்கிள் மற்றும் கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட இருவரையும் கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைக்காக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.




