77வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாட்டுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்தியில், “சுதந்திரம் என்பது ஒருபோதும் தேசத்தின் இறைமை மட்டுமல்ல. அது கண்ணியம், நீதி மற்றும் ஒடுக்குமுறை இல்லாத வாழ்வுக்கான அனைவரின் உரிமையை உறுதிப்படுத்துவதாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இனம், மதம், சாதி, பாலினம் அல்லது வர்க்கம் என்ற எந்த விதமான வேறுபாடுமின்றி, எல்லா சமூகங்களும் சமமான வாய்ப்புகளுடன் நாட்டை கட்டியெழுப்புவதற்கான பங்களிப்பை வழங்கும் ஒரு சூழல் உருவாக்கப்பட வேண்டும். உண்மையான சுதந்திரம், அனைவருக்கும் உரிய மதிப்பு மற்றும் பெறுமதி கிடைக்கும் சமூகத்தை உருவாக்குவதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
“வளமான நாடு, அழகான வாழ்க்கை” என்பது வெறும் ஒரு கோட்பாடாக இருக்கக்கூடாது; அது செயற்பாட்டுக்கான ஒரு அழைப்பு. ஆழமான ஜனநாயகம் மற்றும் பொருளாதார நீதிக்கு முன்னுரிமை அளிக்கும் எண்ணக்கருவாக நாட்டை முன்னெடுக்க வேண்டும் என குறிப்பிட்ட பிரதமர், விளிம்பு நிலை சமூகங்களின் குரல்கள் தன்னிச்சையாக வெளிப்படாது; அவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் ஒரு பொறுப்பான மற்றும் சமத்துவமான ஆட்சி முறைமையை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க நாளில், சுதந்திரத்தின் உண்மையான பொருளை உணர்ந்து, அனைவருக்கும் உரித்தான இலங்கை தேசத்தை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.