ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என அமைச்சரவை பேச்சாளர் வெளியிட்ட அறிவிப்பு ஜனநாயகத்திற்கும் சட்டத்திற்கும் முரணானது என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில், தற்போது பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விஷேட சட்டத்தின் அடிப்படையில், தேர்தலுக்கான வேட்பு மனு பெறப்படும் திகதியை அறிவிக்கும் முழு அதிகாரமும் தேர்தல் ஆணைக்குழுவிற்கும், அவர்களுக்கு கீழ் இயங்கும் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடினார்.
இச்சட்டம் அமுலாகும் திகதியிலிருந்து மூன்று மாதத்திற்குள் உள்ளூராட்சி தேர்தல் நடைபெற வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே, தேர்தல் ஆணைக்குழு அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் கலந்தாலோசித்து தகுந்த ஒரு திகதியை அறிவிக்க வேண்டும்.
அரசாங்கத்திற்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட கட்சிக்கோ சாதகமாகத் தேர்தல் திகதி தீர்மானிக்கப்படுவது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் எனவும், அதனை தவிர்க்க வேண்டும் எனவும் நிஸாம் காரியப்பர் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.