– கருணாகரன்
இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு இது 75 ஆவது ஆண்டு. ஆனால் 75 ஆண்டு (பவள விழா) கொண்டாட்டங்களை நடத்த முடியாத அளவுக்குக் கட்சி பலவீனப்பட்டுள்ளது. கட்சிக்குள் உள்மோதல்கள் வலுப்பெற்றுள்ளன. இதனால் கட்சி நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறது. பல வழக்குகள். மேலும் வழக்குகள் தொடரப்படக்கூடும் என்றே தெரிகிறது.
கட்சியின் முக்கியஸ்தர்களான அரியநேத்திரன், கே.வி.தவராஜா, சசிகலா ரவிராஜ், சரவணபவன் உள்ளிட்ட பலர் தகுதிநிலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். சிவமோகன் இடைநிறுத்தப்பட்டுள்ளார். இந்தக் காய் வெட்டும் களையெடுப்பும் நிற்கப்போவதில்லை. மேலும் தொடரக்கூடிய வாய்ப்புகளே அதிகமுண்டு.
அணி இரண்டாகினால், பிளவும் பிரிவும் காய் வெட்டும் களையெடுப்பும் சாதாரணமாகி விடும். அதற்கான நியாயங்களும் நியாயப்படுத்தல்களும் தானாகவே உருவாகிக் கொள்ளும்.
கடந்த வாரம் கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் வவுனியாவில் நடந்தபோது கட்சியின் ஒரு தரப்பினர், மத்தியசெயற்குழுவை நோக்கிக் கேள்விகளை எழுப்பிய, குற்றச்சாட்டுகளை எழுப்பிய பதாதைகளை கூட்டம் நடந்த மண்டபத்தின் வாசலில் கட்டியிருந்தனர். இது கட்சியின் உள் நிலைமையை, அதனுடைய உள் விரிசல்களை மேலும் விளக்குகிறது. அடுத்து வரப்போகிற உள்ளுராட்சி மன்றத் தேர்தல், மாகாணசபைகளுக்கான தேர்தலில் இந்த விரிசல் மேலும் வலுப்பெறவே வாய்ப்புண்டு.
இதையெல்லாம் மேலும் வளரவிடாமல் சீராக்கலாம் என்ற நம்பிக்கையில் மாவை சேனாதிராஜாவைத் தூக்கி விட்டு, பதில் தலைவராக சீ.வி.கே. சிவஞானத்தைத் தலைவராக்கியுள்ளது கட்சி. மாவையின் தலைமைக்காலத்தில்தான் கட்சி மிக மோசமான அளவுக்கு உள்வெடிப்புகளைக் கண்டது. அவரை நீக்கி விட்டுச் சிவஞானத்தை நியமித்திருப்பதன் மூலம் அந்த வெடிப்புகளை ஒட்டிச் சீராக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால், அது சிரமான காரியம்.
அதைப் பற்றிக் கீழே பார்க்கலாம்.
இப்பொழுது தலைமைப்பதவியிலிருந்து கழற்றி விடப்பட்ட சேனாதிராஜாவுக்குப் பெருந்தலைவர், அரசியல் குழுத் தலைவர் என்றெல்லாம் ஒரு அலங்காரத் தலைப்பாகையைக் கட்டி விட்டிருக்கிறார்கள். சம்மந்தன் இருந்தபோதும் அவருக்கு இத்தகையதொரு மதிப்பு வாய்ந்த இடமளிக்கப்பட்டிருந்தது உண்மையே. அதைப்போலச் சேனாதிராஜாவுக்கும் அத்தகைய இடமளிக்கப்பட்டுள்ளது என்று இதற்கான நியாயம் சொல்லப்பட்டுள்ளது.
சம்மந்தனுக்கு வழங்கப்பட்ட இடமும் மதிப்பும் சேனாதிராஜாவுக்குக் கிடைக்கப்போவதில்லை. அதை யாரும் வழங்கப்போவதுமில்லை. மட்டுமல்ல, தமிழ் மக்களுடைய அரசியல் வெற்றிகளைச் சாதிக்க முடியாது விட்டாலும், கட்சியைப் பொறுத்தவரையில் சிறுதுரும்பையும் இரும்பாக்கக் கூடிய வல்லமை சம்மந்தனுக்கிருந்தது. இரும்பையும் சிறுதுரும்பாக்கும் ஆளே சேனாதிராஜா. ஆகவே சேனாதிராஜா இனிச் செல்லாக் காசாக்கப்பட்ட சேனாதிராஜாவாகவே இருக்கப்போகிறார்.
இப்படிச் சமாளிப்புகள், குழிவெட்டுதல்களோடுதான் கட்சி பயணிக்க வேண்டியுள்ளது. அதாவது அறுவைச் சிகிச்சை செய்து தன்னைச் சீராக்கிக் கொள்வதற்கு அது இன்னும் தயாராகவில்லை. அதைச் செய்வதற்கு அதற்கு முடியாது. தமிழரசுக் கட்சியின் குணாம்சமே – இயல்பே – வரலாறே – இதுதான். பழைய குப்பை, கூழங்களையெல்லாம் சேர்த்து வைத்துக் கொள்வது. அதைக் கூட்டித் துப்புரவு செய்வதற்கு அது ஒருபோதுமே முன்வருவதில்லை. கட்சியின் தளர்வை மட்டுமல்ல, அதனுடைய அரசியற் கொள்கை, அதற்கான நடைமுறைகள் போன்றவற்றைக் கூட அது புத்தாக்கம் செய்வதில்லை. சமகால நிலவரங்கள் என்ன என்றே கட்சிக்குத் தெரியாது. கட்சிக்குத் தெரியாது என்றால், அதிலே உள்ளவர்களுக்கு இதைப்பற்றிப் புரியாது.
என்பதால்தான் அவர்கள் 1960, 70 களின் அரசியலைத் தூக்கிகொண்டு நிற்கிறார்கள். காலங்கடந்த அரசியலை, தோற்றுப்போன அரசியலை, சாத்தியப்படுத்த முடியாத அரசியலைக் காவிக்கொண்டிருக்கிறார்கள். இதனால்தான் தமிழரசுக் கட்சியால் அது முன்மொழிந்த சமஸ்டியை 75 ஆண்டுகளாகப் பெற முடியாமலுள்ளது. மட்டுமல்ல, தமிழரசுக் கட்சி தொடங்கப்பட்டபோது ஈழத்தமிழர்களிருந்த சமூக – அரசியற் பலம் இப்போதில்லை. இப்பொழுது மிகப் பாதகமான நிலையிலேயே ஈழத்தமிழ்ச்சமூகம் உள்ளது. இதற்கான பொறுப்பை தமிழரசுக் கட்சி ஏற்க வேண்டும். அந்தப் பொறுப்பேற்றல் என்பது, தமிழரசுக் கட்சியினுடைய பொறுப்புக் கூறலில் இருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும். அந்தப் பொறுப்புக் கூறுதல் என்பது, அது ‘தமிழர்களுக்குத் தமிழரசு – தனியரசு‘ என்று உருவாக்கப்பட்ட எண்ணக் கருவிலிருந்து தொடர்ந்து வந்த விளைவுகளுக்கானது என்ற அடிப்படையில் அமையும். இதற்கு அதுவும் (தமிழரசுக் கட்சி) அதனுடைய ஆதரவாளர்களும் தம்மைப் சுயவிமர்சனம் செய்து கொள்வது அவசியம். அத்துடன் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலத்தைப் பற்றிய தயக்கமின்றிய அரசியல் ஆய்வுக்குத் தயாராக வேண்டும்.
அதைச் செய்யாத வரையில் தமிழரசுக் கட்சியினால் நீதிமன்ற வழக்குகளை முடிவுக்குக் கொண்டு வந்தாலும் மீள முடியாது. சேனாதிராஜாவுக்குப் பதிலாகச் சிவஞானத்தை மாற்றினாலும் புதிதாக எதுவும் நிகழாது. மோதகத்துக்கும் கொழுக்கட்டைக்கும் ஏதாவது வித்தியாமிருக்கா? அப்படித்தான் இதுவும்.
இந்த நிலையில்தான் புதிய – பதில் – தலைவரான சி.வி.கே. சிவஞானத்தை வைத்துக் கொண்டு கட்சியை முன்னகர்த்தலாம் என்று கட்சி யோசிக்கிறது. இதை விட, சிவஞானமோ, சுமந்திரனை ஆதரிப்பவர். சுமந்திரன் வழிமுறையில் சிந்திப்பவர். ஆகவே கட்சிக்குள் சுமந்திரனின் செல்வாக்கு நீடிக்கவும் பலமடையவுமே வாய்ப்புண்டு. இதை உறுதிப்படுத்துவதைப்போலவே, ‘தமிழரசுக் கட்சியின் பேச்சாளராக சுமந்திரனே இருப்பார்‘ என்று சிவஞானம் சொல்லியிருப்பதைப் புரிந்து கொள்ளலாம். மட்டுமல்ல, சுமந்திரன் கடந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதால், ‘அவர் இனிக் குரல் தர வல்லவரல்ல. அவருடைய சிறகுகள் அறுக்கப்பட்டு விட்டன. அவருடைய பற்கள் பிடுங்கப்பட்டாயிற்று‘ என்றொரு தோற்றப்பாட்டை உருவாக்கும் விதமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான ஸ்ரீநேசன் ஒரு ஊடகச் சந்திப்பை நடத்தியிருந்தார். அதற்குப் பதிலடியாக, மறுத்தானாகவே சிவஞானத்தின் இந்த அறிவிப்புள்ளது.
ஸ்ரீநேசன், மாவை சேனாதிராஜா போன்றவர்கள் சிறிதரனின் ஆதவளர்கள் – அணியினர். அவர்கள் இப்பொழுது பின்தள்ளப்பட்டுள்ளனர். பாராளுமன்றத்திலும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்ற அடிப்படையிலும் சிறிதரன், ஸ்ரீநேசன் போன்றவர்கள் தாம் பலமானவர்கள் எனக் கருதலாம். அது எந்தளவுக்கு நிரூபிக்கப்படும் பலமாக இருக்கும் என்பதை எதிர்வரும் காலம்தான் தீர்மானிக்க முடியும். இப்போதைய சூழலில் சிவஞானம், சாணக்கியன், சுமந்திரன் ஆகியோரே முன்னிலையைக் கொண்டுள்ளனர். நாடாளுமன்றக் குழுத்தலைவர் சிறிதரன், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற அணியின் பேச்சாளர் ஸ்ரீநேசன் என்றெல்லாம் வெளியே சொல்லிக் கொண்டிருந்தாலும் சாணக்கியனோடும் சிவஞானத்தோடும் இணைநிலைப் பயணியாக சுமந்திரனே களமாடக் கூடிய வாய்ப்புகள் அதிகமுண்டு. தேர்தலுக்குப் பின்னர் நான்கு ஐந்து அரசியற் சந்திப்புகளை சுமந்திரன் + சாணக்கியன் அணி சாத்தியப்படுத்தியுள்ளது. இது மேலும் தொடரும்.
இந்தச் சூழலில்தான் கடந்த மாதம் நடந்த இன்னொரு மத்திய செயற்குழுக் கூட்டத்தில் மாவையைத் தலைவராக ஏற்கத் தேவையில்லை என்று துணிகரமாக சாணக்கியன் அணி சொன்னது. இல்லை, அவரை வைத்தே கூட்டத்தை நடத்த வேண்டும் என்ற சிவமோகன் அணி இப்பொழுது வெளித்தள்ளப்பட்டுள்ளது
உள்ளே இப்படி ஏராளம் கசப்புகளும் இடைவெளிகளும் உள்ளபோதும் வெளியே பேசும்போது தமிழரசுக் கட்சிதான் தமிழர்களுடைய பேராதரவைப் பெற்ற ஒரே கட்சி என்ற பெருமிதங்களை அதனுடைய உறுப்பினர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். இதற்கு வாய்ப்பாக கடந்த (2024 நவம்பரில்) பாராளுமன்றத் தேர்தலில் ஏனைய தமிழ்க்கட்சிகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டுத் தமிழரசுக் கட்சியே வெற்றியைப் பெற்றுள்ளது. அதற்கு எட்டு ஆசனங்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் பாராளுமன்றத்தில் அது மூன்றாவது செல்வாக்குள்ள – அதிக உறுப்பினர்களைக் கொண்ட – கட்சியாக உள்ளது.
அப்படியானால் எத்தகைய முடிவுக்கு மக்கள் வர முடியும்?
கட்சியின் அரசியற் கொள்கை – அரசியல் நிலைப்பாடு பழையது. சாத்தியக் குறைவானது. தோற்றுப்போனது. கட்சிக்குள் அணிமோதல், அதன் விளைவான குழிபறிப்புகள், வழக்குகள் என்றெல்லாம் இருந்தாலும் அதையெல்லாம் கடந்து தமிழரசுக் கட்சியைத்தானே மக்கள் அங்கீகரித்திருக்கிறார்கள். அதற்குத்தானே ஆதரவு கிடைத்துள்ளது? என்ற கேள்வி இந்த இடத்தில் எழும்.
இதற்கான வரலாற்றுக் காரணங்களையும் சமகால நிலவரங்களையும் நாம் இணைத்துப் பார்க்க வேண்டும்.
தமிழரசுக் கட்சி வெற்றியடைந்திருப்பதும் அதுவே பாராளுமன்றத்தில் மூன்றாவது இடத்தில் இருப்பதும் அதையே மக்கள் அங்கீகரித்திருப்பதையும் ஒரு அரசியல் வெற்றியாக நாம் கொள்ள முடியாது. ஆனால், கட்சி அப்படித்தான் கருதும். அப்படித்தான் தன்னை நிரூபித்து, பிறரைக் கருத வைக்கும்.
அது கட்சியினுடைய தேவை.
கட்சிக்கு வெளியே அரசியலைப் பகுத்துப் பார்க்க விரும்புவோருக்கும் உண்மையை அறிய வேண்டியவர்களுக்கும் கட்சியின் கருதுகோளைத் தூக்கிச் சுமக்க வேண்டிய அவசியமில்லை. அப்படி இருக்கவும் கூடாது.
1972 இல் தமிழரசுக் கட்சி உத்தியோகபூர்வமாகச் செயலிப்புக்குப் போனது. அதற்கு முன்பே, அதனுடைய இயலமையைக் குறித்துத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகரான எஸ்.ஜே.வி. செல்வநாயகம் பகிரங்கமாகச் சொல்லி விட்டார் – ‘‘தமிழ் மக்களை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்‘‘ என்று.
அதற்குப் பிறகு அடுத்த நிலையிலிருந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அதை தமிழர் விடுதலைக் கூட்டணியாக உருவமாற்றம் செய்தார். அதற்காக அவர் எதிரணியாக இருந்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸோடு – ஜீ.ஜீ. பொன்னம்பலத்தோடு கூட்டுச் சேர்ந்தார். 1977 இல் தமிழர் விடுதலைக் கூட்டணி புதிய லேபிளில் வெற்றியைப் பெற்றது. ஆனாலும் அதனால் தொடர்ந்து அரசியல் அரங்கில் நின்று பிடிக்க முடியவில்லை. அதனுடைய கொழும்பு மைய அரசியலும் நடைமுறைச் சாத்தியமற்ற கற்பனைக் கோட்பாடுகளும் அதனை வெளிறச் செய்தன.
1977 க்குப் பிறகு எழுச்சியடைந்த ஈழ விடுதலை இயக்கங்கள் தமிழர் விடுதலைக்கூட்டணியை முற்றாகவே நிராகரித்தன. அதனோடு இலங்கை தமிழரசுக் கட்சியும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸூம் தமிழ்ப் பிராந்தியத்தை விட்டே வெளியேறி விட்டன.
அதாவது, 1977 இல் அமிர்தலிங்கத்தினால் தமிழரசுக் கட்சியை மீளுயிர்ப்பு செய்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சியும் தோற்றது. இறுதியில் 1989 இல் அமிர்தலிங்கமும் விடுதலைப்புலிகளால் கொழும்பில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். தமிழ் அரசியற் தலைவர் ஒருவர் கொழும்பில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டதன் அரசியற் சேதியை தமிழ் மக்கள் கவனத்திலெடுத்துப்பார்க்க வேண்டும். இந்தக் கட்டுரை அந்தக் கொலையின் சரி – தவறுகளைப் பற்றி இங்கே பேசவில்லை. அது தனியாகப் பேசப்பட வேண்டியது. ஆனால் அன்று தமிழ்ப் பிரதேசத்தை விட்டுக் கொழும்பிலும் இந்தியாவிலுமே தமிழரசுக் கட்சி, தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவை தளமிட்டிருந்தன.
2000 இல் புலிகள் – இலங்கை அரசுக்கு இடையில் நடந்த பேச்சுவார்த்தையோடு உருவாகிய விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்ட மறைமுகமான சர்வதேச நெருக்குவாரம், தவிர்க்க முடியாமல் ஏனைய அரசியற் தரப்புகளோடு உடன்பாட்டுக்குச் செல்ல வேண்டிய நிலையை உருவாக்கியது. அதற்காக எதிர்த்தரப்பிலிருந்த – ஒரு காலத்தில் புறமொதுக்கியிருந்த – அரசியற் கட்சிகளைத் தூசி தட்டி எடுக்க வைத்தது.
இந்த அரசியற் சூழல் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வாய்ப்பைக் கொடுத்தது. ஜனநாயக வழிமுறையிலான தேர்தலொன்றில் புலிகள் தமக்குள்ள ஆதரவை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்ற நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு புலிகள் முன்வந்தனர். முதற்தடவை அது சாத்தியமாகினாலும் தொடர்ந்து ஆனந்தசங்கரியின் இயல்பினால் அதைத் தக்க வைக்க முடியவில்லை. அப்பொழுது கூட்டணியின் தலைமைப் பொறுப்பில் ஆனந்தசங்கரியே இருந்தார். ஆனந்தசங்கரியின் உணர்ச்சிவசப்பட்ட போக்கு, அந்த வாய்ப்பை தமிழரசுக்கட்சியின் அடையாளத்தோடிருந்த சம்மந்தனுக்குக் கிடைத்தது. சம்மந்தன் அதைப் பயன்படுத்திக் கொண்டார்.
சம்மந்தனுக்கு விடுதலைப்புலிகளுடன் முழுமையான உடன்பாடு இல்லாது விட்டாலும் முரண்பட்டுக் கொள்ளாமல் சமரச அரசியலை மேற்கொண்டு தன்னைத் தக்க வைத்துக் கொண்டார். அதன் விளைவாகவே இப்பொழுது தமிழரசுக் கட்சி இன்றைய வளர்ச்சி நிலையை எட்டியது. ஆகவே இன்றைய தமிழரசுக் கட்சி, சம்மந்தனுக்கே நன்றி சொல்ல வேண்டும். சம்மந்தனுக்கே கடமைப்பட்டுள்ளது.
ஏனென்றால் செல்வநாயகம், அமிர்தலிங்கம் போன்றோரால் கைப்பற்ற முடியாமல் அழிந்த நிலையிலிருந்த கட்சியை சம்மந்தன் மீளுயிர்க்க வைத்தார்.
ஆனாலும் சம்மந்தனுடைய காலத்தில் தமிழரசுக் கட்சி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஒரு அங்கமாகவே இயங்க வேண்டியிருந்தது. முதற்காலட்டத்தில் விடுதலைப்புலிகளோடு நிபந்தனையற்று அனுசரிக்க வேண்டியிருந்தது. அதைச் சம்மந்தன் செய்தார். அதாவது புலிகளிடம் பணிந்திருந்தார்.
இரண்டாவது காலட்டத்தில், கூட்டமைப்பில் இணைந்திருந்த முன்னாள் இயக்கங்களான ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோவையும் காங்கிரஸையும் தனக்குக் கீழே வைத்திருந்தார். அவற்றின் மீது மேலாதிக்கம் செலுத்தி வந்தார். அதற்கு வாய்ப்பாக அவருக்குத் தமிழரசுக் கட்சியின் சின்னத்தைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புப் பயன்படுத்தி வந்தமை இருந்தது.
இதை உடைத்து தமிழரசுக் கட்சியைப் பலவீனப்படுத்தவதற்கு அல்லது சமனிலைப்படுத்துவதற்கு ‘‘தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும்‘‘ என்று பங்காளிக்கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ ஆகியவை அழுத்தம் கொடுத்தன. அதற்கு முன்பு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் நெருக்கடியைக் கொடுத்தது. ஆனால், சம்மந்தன் அதையெல்லாம் பொருட்படுத்தவேயில்லை. இதனால் காங்கிரஸ் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது. ‘‘சம்மந்தனுடைய பிடிவாதத்தினால் கூட்டமைப்பு உடைகிறது – தமிழரின் பலம் சிதைகிறது‘‘ என்ற குற்றச்சாட்டும் விமர்சனமும் பலமாக முன்வைக்கப்பட்டது. சம்மந்தன் கிறங்கவேயில்லை.
மட்டுமல்ல, கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சியின் கையை அவர் மேலுயர்த்தியே வைத்திருந்தார். இதனால் ஏனைய பங்காளிக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ ஆகியவை கூட்டமைப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்று பிடிவாதமாகவே நின்றன. இறுதியில் ஈ.பி.ஆர்.எல்.எவ் வெளியேறியது. அப்போதும் சம்மந்தன் எந்த விட்டுக் கொடுப்புக்கும் செல்லவில்லை. பதிலாக தமிழரசுக் கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கையிலேயே ஈடுபட்டார்.
இது சம்மந்தன் மீதான விமர்சனங்களை மேலும் கடுமையாக்கியது. கூடவே சம்மந்தனுக்கு ஆதரவாகச் செயற்பட்ட சுமந்திரனையும் எதிர்நிலையில் நோக்க வைத்தது. அதாவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சம்மந்தனும் சுமந்திரனும் உடைத்து விட்டனர். தமிழர்களுடைய பலத்தைச் சிதைத்து விட்டனர். தமிழ் மக்களுக்குத் துரோகமிழைத்து விட்டனர் என்ற விதமாக. இப்போதும் அந்த விமர்சனம் உண்டு.
ஆனால் தமிழரசுக் கட்சியின் பலத்திலும் செல்வாக்கிலும்தான் பங்காளிக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ போன்றவை உயிர்வாழ்கின்றன எனச் சம்மந்தனும் சுமந்திரனும் மதிப்பிட்டனர். அதையே இன்று வரலாறு நிரூபித்துள்ளது. இப்பொழுது தமிழரசுக் கட்சிக்கு எட்டு ஆசனங்கள் கிடைத்துள்ளன. சம்மந்தன் காலமாகி விட்டார். சுமந்திரன் வெற்றியடைவில்லை. ஆனாலும், தமிழரசுக் கட்சியின் முகமாக சுமந்திரனே உள்ளார். சிங்கள மக்களுக்கும் தென்னிலங்கைக்கும் மட்டுமல்ல, சர்வதேச சமூகத்துக்கும் தமிழரசுக் கட்சியென்றால் அது சுமந்திரனின் கட்சியென்றே தெரியும். இதைப் புரிந்துகொண்டபடியால்தான் கட்சியின் பேச்சாளராக சுமந்திரன் இருப்பார் என்று சிவஞானம் சொன்னது.
பாராளுமன்ற தேர்தலில், தமிழரசுக் கட்சியைத் தவிர்த்து, காங்கிரசுக்கு ஒரு ஆசனம். ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் புளொட்டும் அவுட். ரெலோவுக்கு அரும்பொட்டில் ஒரு சிறு வாய்ப்பு.
இன்றைய தமிழ்த்தேசியவாத அரசியலை தமிழரசுக் கட்சியோடும் ஏனைய தமிழ்த்தேசியவாதக் கட்சிகளோடும் மதிப்பிட்டால், தமிழரசுக் கட்சியும் தமிழ்காங்கிரசும் வெற்றியடைந்துள்ளன. அப்படியென்றால், இந்த மூத்த கட்சிகளைத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கின்றனரா? அவற்றின் தவறுகள், போதாமைகளுக்கு மத்தியிலும் அந்தக் கட்சிகளின் அரசியல்தான் தமிழ் மக்களுடைய அரசியலா? என்ற கேள்வி எழும்.
இது விரிவாக ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். (அடுத்த கட்டுரையில் இதனைப் பார்க்க முடியும்).
சுருக்கமாகப் பார்த்தால், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் அரசியற் போதாமைகளிலிருந்து (1950 இல்) உருவாகியதே இலங்கைத் தமிழரசுக் கட்சியாகும். தமிழரசுக் கட்சியின் போதாமையிலிருந்து உருவாகியதே (1972) தமிழர் விடுதலைக் கூட்டணி. அதனுடைய போதாமையிலிருந்தே உருவாகியவையே (1970 களின் பிற்பகுதி) ஈழ விடுதலை இயக்கங்கள். அவற்றின் போதாமைகளிலிருந்து உருவாகியதே (2001) தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு. இப்படியெல்லாம் நிகழ்ந்து வந்த வரலாற்று வளர்ச்சி, இப்பொழுது திரும்பி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸிடமும் இலங்கைத் தமிழரசுக் கட்சியிடமும் சென்றிருக்கிறது என்றால், தமிழர்களின் அரசியலும் பின்னோக்கிச் சென்றுள்ளது என்றே அர்த்தமாகும்.
நிச்சயமாக.
ஏனென்றால், முப்பது ஆண்டுகளுக்கு முன், தோற்றுப்போன அரசியற் சித்தாந்தந்தத்துக்கு இன்னும் குறைந்தளவேனும் மதிப்பிருக்கிறது – செல்வாக்கிருக்கிறது என்றால், இதை வேறு எப்படிச் சொல்வது?
தமிழரசுக் கட்சியும் தமிழ்க் காங்கிரசும் 1970 கள் வரையில் பிராந்திய அரசியலையே மேற்கொண்டன. பிராந்திய அரசியல் அதிகாரத்தையே கோரின. இப்பொழுதும் அவற்றின் நிலைப்பாடு அதுதான். அவற்றின் பெயரோ ‘அகில இலங்கை‘ என்ற அடையாளத்தையும் எண்ணக் கருவையும் சுட்டுவதாகும்.
‘‘ஒரு நாடு இரு தேசம்‘‘ என்று கூறும் தமிழ்க் காங்கிரஸ் (கஜேந்திரகுமார் பொன்னம்பலம்) ‘அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி‘யின் உத்தியோக பூர்வமான தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாவார். அப்படித்தான் ‘இலங்கைத் தமிழரசுக் கட்சி‘க் காரர்களும். இவர்கள் கொழும்பில் (மையத்தில்) உறவும் வடக்குக் கிழக்குப் பிராந்தியத்தில் எதிர்ப்புமாக தோற்றம் காட்டுவர்.
இந்த அடையாள முரணே அவற்றின் அரசியல் முரணுமாகும்.
இதனால்தான் அவற்றின் அரசியல் கடந்த காலத்தில் தோற்றுப் போனது. அதாவது, வடக்குக் கிழக்கில் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக பிராந்திய அரசியலை – தமிழ்த்தேசிய அரசியலை – பிரிவினைவாத அரசியலைத் தீவிரமாகக் கொதி நிலையில் பேசுவது. நடைமுறையில் கொழும்பு மையத்தோடு உறவைப் பேணுவது. இந்த இரட்டை நிலைப்பாடே அவற்றின் அரசியற் தோல்வியாகும்.
புலிகள் இருந்தபோது இவற்றைத் தமது கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருந்தனர். விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு, அந்த வெற்றிடத்தைப் பயன்படுத்தி, தம்மை மீண்டும் மீள்நிலைப்படுத்திக் கொண்டன இவை இரண்டும். அதனால்தான் இரண்டு கட்சிகளும் இப்போதும் உயிர்வாழ்கின்றன. விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு எழுச்சியடைந்திருக்க வேண்டிய ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ, ஈரோஸ் போன்றவற்றின் அரசியல் பலவீனமும் இதற்கு அப்பாலான புதிய அரசியற் தரப்புகளுடைய இயலாமைகளும் தமிழரசுக் கட்சியையும் தமிழ்க் காங்கிரஸையும் உயிரூட்டி, வளர்த்துக் கொண்டேயிருக்கிறது.
ஒரு காலம் இந்தக் கட்சிகளால் பயனே இல்லை. இந்தக் கட்சிகள் மக்களுக்குத் துரோகமிழைத்து விட்டன. இவற்றின் தலைவர்களை விட்டு வைக்கவே கூடாது என்று கடும்போக்கைப் பின்பற்றிய விடுதலைப்புலிகளும் ஏனைய இயக்கங்களும் பின்னர் இந்தக் கட்சிகளுடன் சமரசத்துக்குச் சென்றது வரலாற்றின் விசித்திரமும் சோகமுமாகும். இதில் இன்னும் சில படிகள் முன்னே சென்று தமிழரசுக் கட்சியே கதி என்ற நிலைக்கு ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ போன்றவை தள்ளப்பட்டுள்ளமை இன்னொரு துயரமாகும்.
இந்த வரலாற்றுப் பின்னணியில், விழுந்தும் சிதைந்தும் எழுந்து நிற்பது தமிழரசுக் கட்சியே. உண்மையில் இது தமிழ் மக்களின் இயலாமையும் தோல்வியும் பின்னடைவுமேயாகும். இந்தத் தோல்வியே அவர்களை போருக்கு முந்திய 1970 களில் கொண்டுபோய் நிறுத்தியுள்ளது.
அப்படியென்றால், சமகாலச் சூழலுக்கு வருவதற்கு தமிழ் மக்கள் 55 ஆண்டுகாலம் முன்னோக்கிப் பயணிக்க வேண்டும். அதற்கிடையில் தாண்டவேண்டிய தடைகள் ஏராளம். அந்தத் தடைகளைத் தாண்டுவதற்கு இந்த ஓட்டைப் படகுகளும் உக்கிப்போன ஏணியும் பயன்தராது. ஆட்களை மாற்றுவதாலோ, அடையாளத்தை மாற்றுவதாலோ பயனில்லை. பொருத்தமான அரசியல் நிலைப்பாட்டை எடுத்துச் சாத்தியப்படுத்துவதே பயனுடையதாகும். அது ஒரு போராட்டத்துக்குரிய வித்து.
00