கொழும்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் இளைஞர்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும், வட்ஸ்அப் ஊடாகவும் அழைக்கப்பட்டு, மஹரகம ஹைலெவல் வீதியில் கண்காணிப்பின்றி நடத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 29 இளைஞர்கள் 21 மோட்டார் சைக்கிள்களுடன் (12ஆம் திகதி) அதிகாலை கைது செய்யப்பட்டதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.
போட்டியில் முதல் வெற்றியாளருக்கு அழகிய திருநங்கையின் நெருக்கத்தை பெற்றுக்கொடுக்க போட்டியின் ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்திருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிள்களில் பயணித்த 14 இளைஞர்களும், போட்டியை கண்டுகளித்து உற்சாகப்படுத்திய 15 இளைஞர்களும் நேற்று முன்தினம் (12ம் திகதி) அதிகாலை, போட்டிகளுக்கு பயன்படுத்தப்பட்ட 21 மோட்டார் சைக்கிள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பந்தயத்தில் ஈடுபட்ட 14 இளைஞர்களும் நுகேகொடை நீதவான் நீதிமன்றில் அன்று பிற்பகல் ஆஜர்படுத்திய பின்னர் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுகேகொட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல், பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த இரு திருநங்கைகளும், போட்டியை கண்டுகளித்த பதினைந்து பேரும் நிபந்தனைகள் மற்றும் எச்சரிக்கையுடன் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
ரத்மலானை, பிலியந்தல கஸ்பேவ, கொட்டாவ, கிருலப்பனை, இங்கிரிய, ஹோமாகம மற்றும் பொரலஸ்கமுவ, மீகொட, பாதுக்க வடரேக போன்ற பிரதேசங்களில் வசிக்கும் 18 தொடக்கமட 25 வயதுடைய இளைஞர்கள் 14 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தப் போட்டியில் முதலிடம் பெறும் போட்டியாளருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையுடன், அழகான திருநங்கையின் துணையைப் பெறும் வாய்ப்பும் இந்த போட்டியில் வழங்கப்பட்டது. அதற்காக அழைத்து வரப்பட்ட இரு திருநங்கைகள் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. அந்த திருநங்கைகளில் ஒருவரை, பந்தயத்தில் முதலிடம் பெறுபவர் தெரிவு செய்து நெருக்கமாக இருக்கலாம்.
அந்த திருநங்கைகள் பொலிஸ் பிணையில் விடுவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இளைஞர்களிடம் விசாரணை நடத்தியதில், இணையத்தில் வெளியான ஆப் மூலம் தொடர்பு கொண்டு, பணம் செலுத்தி, பந்தயத்திற்கு வந்திருப்பது தெரியவந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.




