ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான சர்வதேச விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும் விசாரணைகளின் பிரகாரம் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் நேற்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எப்.பி.ஐ மற்றும் அவுஸ்திரேலிய பெடரல் ஏஜென்சியின் விசாரணைகளைத் தொடர்ந்து நௌபர் மௌலவி என்ற நபர் இந்தத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
உள்நாட்டு விசாரணையில் நம்பிக்கையில்லை, வெளிநாட்டு ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு மூலங்களின் வழியாக பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டு, எதிர்க்கட்சிகள் மற்றும் நாட்டிலுள்ள பல்வேறு தரப்பினர் சர்வதேச விசாரணையை கோரி வரும் நிலையில், பொதுப்பாதுகாப்பு அமைச்சர் இந்த தகவலை கூறியுள்ளார்.
எதிர்க்கட்சிகளுக்கு இந்த விடயத்தில் நம்பிக்கை இல்லை என்றால் அனைவரும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்து இதற்கு காரணமானவர்கள் மீது சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
அபு ஹிந்த் யார் என்பது ஒரு கேள்வி. அபு ஹிந்த் ஒரு கட்டுக்கதை அல்ல அது ஒரு தந்திரம். விடுதலைப் புலிகளும் அவ்வாறே செய்தனர். முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் காலத்தில் பாபு என்ற நபருக்கு ஜனாதிபதியின் இல்லத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டது. இந்த நபர் தகவல் மற்றும் உளவுத்தகவல்களை எடுத்துக்கொண்டு முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவை கொன்றுள்ளார். உளவுத்துறை இப்படித்தான் செயல்படுகிறது.
டிஎன்ஏ பரிசோதனைக்காக 26 ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன. அவற்றில் 11 பழுதடைந்தன. கெட்டுப்போன மாதிரிகளிற்காக 11 மாதிரிகள் மீண்டும் எடுக்கப்பட்டன.
பின்னர் புதைக்கப்பட்டவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் உட்பட 86 மாதிரிகள் எடுக்கப்பட்டன. அதன் பிறகுதான் அது பொசிட்டிவ் ஆனது. பொலிஸ் பரிசோதகர் அபுபக்கர், சாரா ஜாஸ்மினை காரில் கடத்திச் சென்றார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. விசாரணை அதிகாரிகளின் அறிக்கை அவர் மீது குற்றஞ்சாட்ட வேண்டாம் என சட்டமா அதிபர் திணைக்களத்திடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சட்டமா அதிபர் திணைக்களம் வழக்குப் பதிவு செய்தது. அப்படித்தான் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
பல வருட சிறைவாசத்திற்குப் பிறகு, இப்போது ஒரு சந்தியில் தேங்காய் விற்கிறார்.
சுரேஷ் சாலே, ஜெமீலை அழைக்கவில்லை. அவரது மனைவி மட்டும் ஜெமீலை அழைத்திருந்தார். அந்த தரவு எங்களிடம் உள்ளது. நௌபர் மௌலவியை ஏன் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க அழைத்து வரவில்லை என அவர் வினவினார். இன்று அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துபவர்களின் நண்பர்களால் சாட்சியமளிக்க அழைத்து வரப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய பல காரணங்களுக்காக ஷானி அபேசேகரவை இடமாற்றம் செய்துள்ளார். ரவி செனவிரத்ன வழமை போல் ஓய்வு பெற்றார். ஆனால் அவர் மாற்றப்பட்டதாக நீங்கள் சொன்னீர்கள். இந்த விசாரணையில் சுமார் 125 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
நான்கு பேர் மட்டுமே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவல் துறையினர் மீது நம்பிக்கை இல்லை என்று எதிர்க்கட்சிகள் கூற முயல்கின்றன. விசாரணை தொடர்பில் இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளின் பட்டியலை தருமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டாரவிடம் கோருகின்றேன். இது சம்பந்தமாக நான் விசாரிப்பேன் என்றார்.