அரசியல் பழிவாங்கல் வழக்குகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன உள்ளிட்ட ஆணைக்குழு உறுப்பினர்களை, நீதிமன்ற அவமதிப்பு சம்பவம் தொடர்பில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி சாட்சியமளிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (10) உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர தாக்கல் செய்த மனு தொடர்பில் வழங்கப்பட்டுள்ள உத்தரவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய வேளையில் தென் பகுதிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக இடமாற்றம் செய்யப்பட்டதாக மனுவில் ஷானி அபேசேகர தெரிவித்துள்ளார்.
அவன்ட் கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி செய்த முறைப்பாடு தொடர்பில் சாட்சியமளிக்குமாறு அரசியல் பழிவாங்கல் வழக்குகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அழைப்பாணைக்கு எதிராக அபேசேகர மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த ரிட் மனு அழைக்கப்பட்ட போது, இந்த விசாரணை நிறைவடையும் வரை சேனாதிபதியின் முறைப்பாடு தொடர்பில் தமக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றில் உறுதியளித்ததாக அபேசேகர தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இருந்த போதிலும், சம்பந்தப்பட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் அடங்கிய அறிக்கை வெளியிடப்பட்டது, மேலும் தனக்கு எதிராக பல பரிந்துரைகள் இருப்பதாக மனுதாரர் கூறுகிறார்.
இதனால் பிரதிவாதிகள் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக தீர்ப்பளிக்கக்கோரி ஷானி அபேசேகர இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.




