நாட்டின் வங்குரோத்து நிலைக்கான காரணங்கள் குறித்து ஆராய எதிர்க்கட்சிகள் தனியான குழுவொன்றை நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் வங்குரோத்து நிலைக்கான காரணங்களைக் கண்டறிய நியமிக்கப்பட்ட குழுவின் தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகத்தை நியமிப்பதன் மூலம் அது தனது கடமையை நிறைவேற்றுவதற்குப் பதிலாக வெறும் பேச்சளவிலான குழுவாகவே மாறும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் நேற்று (10) எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு நிறைவேற்று சபையில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தெரிவுக்குழு தனது கடமையை நிறைவேற்றாது. பசிலுக்கு வெள்ளையடிக்கவே முயற்சிக்கும் என்பது தெளிவாகிறது. இந்த பயனற்ற குழுவிலிருந்து எதிர்க்கட்சிகள் அனைத்தும் வெளியேறி, எதிர்க்கட்சிகள் ஒருகுழுவை அமைக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதேவேளை, இந்த பயனற்ற குழுவிலிருந்து விலகுவதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.




