24.6 C
Jaffna
January 21, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

வெடுக்குநாறி மலைக்கு வந்த அமைச்சர்கள் வெறுங்கையுடன் திரும்பியது ஏன்?: ஆதிலிங்கேஸ்வரர் சிலையுடைப்பும், பின்னணி தகவல்களும்!

வவுனியா மாவட்டத்தின், நெடுங்கேணி- வெடுக்குநாறி மலையில் அமைந்திருந்த ஆதிலிங்கேஸ்வரர் சிலையை, இன்று (2)  மீள வைக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அது நடைபெறவில்லை.

வாய் வழி செய்திகளின் அடிப்படையில் சிலை வைக்க அனுமதிக்க முடியாதென தொல்லியல் திணைக்களமும், நெடுங்கேணி பொலிசாரும் அறிவித்ததையடுத்து, சிலை வைப்பதற்காக சென்றிருந்த அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தாவும், ஜீவன் தொண்டமானும் திரும்பிச் சென்றுள்ளனர்.

ஜனாதிபதியினால் உத்தரவிடப்பட்டால் அது தொடர்பிலான அல்லது வேறு தொடர்புடைய நிர்வாக ஒழுங்கிலான ஆவணங்கள் இருந்தால் மாத்திரமே சிலை வைக்க அனுமதிக்க முடியுமென பொலிசாரும், தொல்லியல் திணைக்களமும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, நாளை அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானமொன்றை எடுத்து, அதனடிப்படையில் சிலையை பிரதிஷ்டை செய்து, இந்த விவகாரத்திற்கு நீண்டநாள் தீர்வை காணவுள்ளதாக அமைச்சர்கள் இருவரும் தெரிவித்தனர்.

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் விவகாரம் தொடர்பில் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளதால், மேற்படி ஆவணங்களை பொலிசாரும், தொல்லியல் திணைக்களமும் கோரியிருந்தனர்.

இதனால் 10ஆம் திகதி வரை ஆலய நிர்வாகத்தினரை பொறுமையாக இருக்குமாறு அமைச்சர்கள் தெரிவித்தனர்.

இன்று வெடுக்குநாறி மலைக்கு வந்த அமைச்சர்கள், மலையுச்சில் சிலை உடைக்கப்பட்ட இடத்திற்கு சென்று பார்வையிடவில்லை. மலையடிவாரத்தில் நின்று பேசிவிட்டு, ஊடகங்களிற்கு பேட்டியளித்து விட்டு சென்றுவிட்டனர்.

ஆதிலிங்கேஸ்வரர் சிலையை மீள பிரதிஷ்டை செய்ய முடியாவிட்டால், பிள்ளையார் சிலையொன்றையாவது வைத்து விட்டு செல்லுங்கள் என ஆலய நிர்வாகத்தினர் கேட்டிருந்தனர். எனினும், அந்த முயற்சியும் வெற்றியளிக்கவில்லை.

இதேவேளை, சிலை உடைப்புக்கு எதிராக கடந்த சில தினங்களின் முன்னர் வவுனியாவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட சி.சிறிதரன், செ.கஜேந்திரன் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு திட்டத்தை முன்வைத்தனர்.பேரணியில் கலந்து கொண்ட மக்கள் ஆலயத்திற்கு சென்று, உடைக்கப்பட்ட சிலைகளை மீள பிரதிஷ்டை செய்வோம் என கேட்டிருந்தனர். என்றாலும், ஆலய நிர்வாகம் அதற்கு இணங்கவில்லை.

சுபநேரத்தில், பூசகர்களால் மட்டுமே சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டுமென ஆலய நிர்வாகம் தெரிவித்து விட்டது.

இன்று, சிலைகளை மீள பிரதிஷ்டை செய்வதாக அமைச்சர்கள் இருவரும் தெரிவித்திருந்த நிலையில், சிறிதரன் எம்.பியையும் கலந்து கொள்ளுமாறு ஆலய நிர்வாகம் அழைப்பு விடுத்திருந்தது. என்றாலும், ஆளுந்தரப்பினர் கலந்து கொள்ளும் நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பவில்லையென தெரிவித்து மறுத்து விட்டார்.

தமிழர்களின் கட்சி மோதலால் நீடிக்கும் சிக்கல்

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தில் சில தமிழ் அரசியல் கட்சிக்காரர்கள் உள்ளனர். இதனால் உள்ளூர அரசியல் போட்டியொன்றும் உள்ளது.

நேற்று இரவு வெடுக்குநாறி மலையில் சிரமதானப்பணியில் ஈடுபட்டிருந்த 3 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். ஆலய பகுதியில் பெரியளவில் சிரமதானப்பணியை செய்து, பொலிஸ், தொல்லியல்திணைக்களத்தின் கவனத்தை ஈர்க்க வேண்டாமென தாம் கூறியும் கேளாமல், ஈ.பி.டி.பி ஆதரவு தரப்பினர் சிரமதானம் மேற்கொண்டதாலேயே புதிய சிக்கல் உருவானதாக ஆலய நிர்வாகத்திலுள்ள ஏனைய தரப்புக்கள் தெரிவித்தன.

எனினும், ஈ.பி.டி.பி ஆதரவு தரப்பினர் அதை நிராகரித்தனர். 4 நாட்களாக சிரமதானப்பணியில் ஈடுபட்டு வருவதாகவும், நேற்று இரவு மட்டும் திடீரென பொலிசார் தலையிட்டதன் பின்னணியில் தமிழ் தேசியம் பேசும் கட்சியொன்றின் உறுப்பினர்கள் பின்னணியில் இருந்ததாக குற்றம்சாட்டினர்.

தமிழ் தேசிய அரசியல் கட்சியொன்றின் உறுப்பினரே சிரமதானத்தில் ஈடுபடுவதை புகைப்படம் எடுத்து, இராணுவப் புலனாய்வாளர்களிற்கு அனுப்பி, பௌத்த பிக்குவொருவருக்கு அனுப்பப்பட்டு, உயர்மட்ட தலையீடு ஏற்பட்டு, கைது நடந்ததாக குற்றம்சாட்டினர். சிலை உடைப்பிலும் தமிழ் தேசியம் பேசும் சில தரப்பினரும் தொடர்புபட்டதாக குற்றம்சாட்டினர்.

எனினும், ஆலய நிர்வாகத்திலுள்ள ஏனைய தரப்பினர் இந்த குற்றச்சாட்டை நிராகரித்தனர்.

நேற்று சிரமதானப்பணியில் ஈடுபட்ட 3 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர். அவர்களின் உழவு இயந்திரம் தற்போது வரை பொலிசாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டு

ஆதிலிங்கேஸ்வரர் சிலை மீள பிரதிஷ்டை செய்யும் போது, அங்கு கல்வெட்டொன்று நிறுவப்பட வேண்டுமென ஆளுந்தரப்பு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் விரும்புகிறார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி செயலணி, அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் உள்ளிட்ட தரப்பினரின் முயற்சியினால் ஆதிலிங்கேஸ்வரர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதாக கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான கல்வெட்டை ஆலய நிர்வாகம் தயாரிக்கவில்லை. சிலையை மீள பிரதிஷ்டை செய்ய முயற்சிக்கும் அரசியல் தரப்புக்களே கல்வெட்டை தயாரிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

3 மணித்தியால இழுபறியின் பின் இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் அமுலாகியது!

Pagetamil

அனுரவின் சீனப்பயணம்: 10 பில்லியன் டொலர் மதிப்பு முதலீடுகள் இலங்கைக்கு கிடைக்கும் வாய்ப்பு!

Pagetamil

மின் கட்டணம் 20 சதவீதத்தால் குறைப்பு!

east tamil

UPDATE: மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச்சூடு; 2 பேர் உயிரிழப்பு!

Pagetamil

மன்னார் நீதிமன்ற வாயிலில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் காயம்: உயிலங்குளம் இரட்டைக்கொலைக்கு பழிக்குப்பழியா?

Pagetamil

Leave a Comment