வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பில் புதிய பிரேத பரிசோதனையை மேற்கொள்வதற்காக சிரேஷ்ட விரிவுரையாளர் மற்றும் தடயவியல் மருத்துவ நிபுணர் அசேல மெண்டிஸ் மற்றும் நீதித்துறை வைத்திய அதிகாரி டொக்டர் வி.ஆர்.ருவன்புர ஆகியோர் அடங்கிய ஐந்து பேர் கொண்ட குழுவை, கொழும்பு மேலதிக நீதவான் ராஜீந்திர ஜயசூரிய நேற்று நியமித்துள்ளார்.
இந்த குழுவினர் பிரேத பரிசோதனை மேற்கொண்டு தினேஷ் ஷாஃப்டரின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணை நேற்று திறந்த நீதிமன்றில் அழைக்கப்பட்ட போதே நீதவான் இந்தக் குழுவை நியமித்தார்.
இறந்தவரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறியும் பொருட்டு மருத்துவ நிபுணர் குழுவின் உறுப்பினர்கள் மூப்பு அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மாஜிஸ்திரேட் மேலும் தெரிவித்தார்.
மேலும் மாஜிஸ்திரேட் விசாரணை மார்ச் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.