யாழ் மாநகரசபையின் சட்டவிரோத முதல்வர் தெரிவை கண்டித்து தமிழ் மக்கள் கூட்டணியின் மாநகரசபை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தலைமையில் ஆரம்மாகி இடம்பெறுகிறது.
இதன் போது, முன்னாள் முதல்வர் வி. மணிவண்ணன் தரப்பினர் (தற்போதைய தமிழ் மக்கள் கூட்டணியினர்) சபையின் அமர்வை புறக்கணித்துள்ளனர்.
சபையில் உரையாற்றிய வரதராஜா பார்த்திபன் சட்ட விரோதமாக முதல்வர் தெரிவு இடம் பெற்றுள்ளது. சபையை நடத்த போதிய உறுப்பினர்கள் இல்லையென உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்து விட்டு சென்ற இரண்டு நாட்களின் பின்னர், தற்போதைய முதல்வர் சட்ட விரோதமாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த முதல்வர் தெரிவை நாம் ஏற்கவில்லையென தெரிவித்தார்.
இதையடுத்து, தமிழ் மக்கள் கூட்டணியினர் (மான் சின்னம்) சபையிலிருந்து வெளியேறினர்.
இதேவேளை, முதல்வர் தெரிவு சட்டவிரோதமானது என வரதராஜா பார்த்தீபன் உரையாற்றிய போது, அகில இலங்கை தமிழ் காங்கிரசின் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஆர்னோல்ட்டிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.
யாழ் மாநகரசபை முதல்வரக ஆர்னோல்ட் முதல்முறையாக தெரிவு செய்யப்பட்ட போது, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதை எதிர்த்ததுடன், ஆர்னோல்ட் முதல்வராகக்கூடாது என்பதில் அதன் தலைவர்கள் தீவிரமாக செயற்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதேவேளை, இன்றைய சபை அமர்வை நடத்துவதற்கு போதுமான உறுப்பினர்கள் சமூகமளிக்க வேண்டுமென்பதற்காக, ஐ.தே.க உறுப்பினரை, முதல்வர் ஆர்னோல்ட் தனது காரை அனுப்பி ஏற்றிவரச் செய்திருந்தார்.
முதல்வர் பதவியை ஏற்று ஒரு நாளாவது கூட்டத்தை நடத்தி விட வேண்டுமென்பதால் ஆர்னோல்ட் இப்படி செயற்படுவதாக தமிழ் மக்கள் கூட்டணியினர் விமர்சனம் செய்தனர்.
யாழ் மாநகர முதல்வர் தெரிவு சட்டவிரோதமானது என தெரிவித்து தாக்கல் செய்த வழக்கு எதிர்வரும் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவது குறிப்பிடத்தகது.