காசல்ரி நீர் தேக்கத்திற்கு நீரேந்திச் செல்லும் பொகவந்தலாவ பொகவான
கெசல்கமுவ ஓயா ஆற்றில் ஆணின் சடலம் ஒன்று இன்று காலை (29) மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிசார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்ட நபர் இன்று விடியற்காலை முதல் வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார். அவரை தேடும் நடவடிக்கையில் உறவினர் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், காணாமல் போனவர் சடலமாக கெசல்கமுவ ஓயா ஆற்றில் மிதந்துக்கொண்டு இருந்ததை இனங்கண்டு பொகவந்தலாவ பொலிசாருக்கு
தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் நடத்திய சோதனையில், கெசல்கமுவ ஓயாவின் அருகாமையில் பாதணிகள், குடை, மாதாந்த வைத்திய பரிசோதனை
புத்தகம் என்பன மீட்கப்பட்டன.
வைத்திய பரிசோதனைப் புத்தகத்தில் இறந்தவர் சிறிய குறிப்பொன்றையும் எழுதி வைத்திருந்துள்ளார். தனக்கு வியாதி தாங்க முடியவில்லை என்றும் தனது முடிவுக்கு தானே பொறுப்பு என்றும் தனது மகன் மிகவும் நல்லவர் என்றும் தன்னை அன்பாக பார்த்துக்கொள்வார் எனவும் யாரையும் தண்டிக்க வேண்டாம் என்றும் எழுதி வைத்துள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட நபர் பொகவந்தலாவ பொகவானை தோட்டப்பகுதியைச் சேர்ந்த
இரண்டு பிள்ளைகளின் தந்தையான 75 வயது கொண்ட பெரியண்ணன் கருப்பையா ஆவார்.
சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிசார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்-



