க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடையாமல் கூலி வேலைக்கு சென்ற 18 வயதான இளைஞன் ஒருவர், பல்வேறு நாடுகளில் உள்ள செல்வந்தர்களின் கிரெடிட் கார்டுகளின் விவரங்களைப் பயன்படுத்தி ஒன்லைனில் ரூ.5 மில்லியன் மதிப்பிலான பொருட்களை வாங்கிய குற்றச்சாட்டில், குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வியாழக்கிழமை (5) கைது செய்யப்பட்டார்.
ஹக்கிங் தொடர்பான அறிவை அந்த இளைஞன் சுயமாகவே வளர்த்துக் கொண்டது தெரிய வந்துள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, மெக்சிகோ மற்றும் அர்ஜென்டினாவைச் சேர்ந்த பயனர்களின் கிரெடிட் கார்டு விவரங்களைத் திருடி, டிசம்பர் 2021 முதல் ஒன்லைனில் விலையுயர்ந்த மதுபான பிராண்டுகள், வாசனை திரவியங்கள், பிராண்டட் ஆடைகள் மற்றும் விலையுயர்ந்த உணவுப் பொருட்கள் போன்ற பொருட்களை வாங்கியுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் தும்மலசூரிய பிரதேசத்தில் உள்ள வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் எனவும், தனிப்பட்ட நபர்களின் கிரெடிட் கார்ட் விவரங்களை இணையத்தில் இருந்து ஹக் செய்வதை சுயமாக ஆய்வு செய்வதன் மூலம் கற்றுக்கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
க.பொ.த சாதாரணதர பரீட்சையில் இரண்டு பாடங்களைத் தவிர மற்ற அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்துள்ளார். பரீட்சையில் தோல்வியடைந்த பின்னர், கூலி வேலை செய்து வாங்கிய ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்தி சுயமாகவே இணைய ஹக்கிங் பற்றி படித்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஸ்மார்ட்போன் வாங்கிய பிறகு, அவர் ஒரு பிரபலமான ஒன்லைன் கேமுக்கு அடிமையாகிவிட்டார், அதன் மூலம் அவர் இணையத்தைப் பயன்படுத்துவதில் அதிக அறிவைப் பெற்றார். பின்னர் அவர் கணினிகள் மற்றும் பிற கணினி அமைப்புகளை ஹக்கிங் செய்யும் வழிகளை படித்துள்ளார். மேலும் கிரெடிட் கார்ட் விவரங்களை ஹக்கிங் மற்றும் திருடுவது தொடர்பாகவும் சுயமாக அறிவை வளர்த்துள்ளார்.
திருடப்பட்ட கிரெடிட் கார்ட் விவரங்களைப் பயன்படுத்தி தனது மொபைல் ஃபோனுக்கு ரூ.50 ரீலோட் செய்ததே அவரது முதலாவது மோசடியாகும் என்று போலீசார் தெரிவித்தனர்.
“ஒன்லைனில் வாங்கிய விலையுயர்ந்த மதுப்பேத்தல்களை அவர் தனது நண்பர்களுக்கு பரிசளித்துள்ளார்” என்று போலீசார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் அவ்வப்போது செய்து வந்த கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் உள்ளூர் நிதி நிறுவனம் ஒன்நு சந்தேகமடைந்து, ஜனவரி 5ஆம் திகதி சந்தேக நபருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளது.
அதன்படி, தும்மலசூரியவில் உள்ள அவரது வீட்டில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கைது செய்தனர்.
அவர் சிறிய, பாழடைந்த வீட்டிலேயே வசித்து வருகிறார். இணையத்தில் விலையுயர்ந்த பொருட்களை கொள்வனவு செய்த போதிலும், வீட்டை இதுவரை புனரமைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபரை அளுத்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவிருந்தனர்.




