யாழ் மாவட்டத்தில் உள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு சுமார் ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட செயலகத்தால் அறிவிக்கப்பட்டதாக தெரிவித்து அரச உத்தியோகத்தர்கள் இன்று புதன்கிழமை யாழ் பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் உள்ள அரச திறன் விருத்தி மையத்தில் ஒன்று கூடினர்.
எரிவாயு அரச உத்தியோகத்தர்களுக்கு எரிவாயு சிலிண்டர்கள் பெற்றுத் தருவதாக மாவட்ட செயலகத்தினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக தெரிவித்து யார் மாவட்டத்தில் உளள பல பகுதிகளிலும் இருந்து அரச உத்தியோகத்தர்கள் அந்த பகுதிக்கு வந்தனர்.
இதன் போது குறித்த பகுதிக்கு வந்த பொதுமக்கள் சிலர் தமக்கு எரிவாயு சிலிண்டர்கள் வேண்டுமென கேட்ட நிலையில் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டது.
இதன்போது அங்க நின்ற அதிகாரிகள் பதிலளிக்கையில் அரச உத்தியோகத்தர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதாக தெரிவித்தனர்.
இதன் போது கருத்து தெரிவித்த பொதுமக்கள், தமது பிரதேசங்களில் எரிவாயுக்காக பெயர்களை பதிவு செய்த நிலையில் இவ்வாறு பெருமளவு சிலிண்டர்களை அரச உத்தியோகத்தர்களுக்கு ஒரே தடவை வழங்குவது எவ் விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பினர்.
அது மட்டும் அல்ல அது குறித்த அரச உத்தியோகத்தர்கள் தமது பிரதேசங்களிலும் எரிவாயுக்காக பதிவு செய்த நிலையில் எவ்வித பதிவு அட்டைகளும் இன்றி அரச உத்தியோகத்தர்களுக்கு விநியோகித்து திரமறைவில் கறுப்புச் சந்தையை தோற்றுவிக்க பார்க்கிறார்களா என கேள்வி எழுப்பினர்.
குறித்த விடயம் தொடர்பு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப் பிள்ளை மகேசனை தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த பகுதியில் அரச உத்தியோகத்தர்களுக்கு எரிவாயு விநியோகத்தை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கவில்லை என தெரிவித்தார்.
எரிபொருள், எரிவாயு விநியோகத்தில் தேசியரீதியான நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. தொழில் ரீதியான பாகுபாடின்றி அனைத்து மக்களும் அவற்றை சிரமமின்றி பெற்றுக்கொள்ள உருவாக்கப்பட்ட அந்த பொறிமுறைகளை மீறி யாழ் மாவட்டத்தில் மட்டும் அரச உத்தியோகத்தர்களிற்கு தனியான எரிபொருள், எரிவாயு விநியோக முறைகளை அரச உத்தியோகத்தர்கள் உருவாக்கி, பலனடைந்து வருவது, சாதாரண பொதுமக்களை பெருமளவு நெருக்கடிக்குள்ளாக்கி வருகிறது. மாவட்ட ஒதுக்கீட்டை இவ்வாறு முறையற்ற விதமாக பெற்றுக்கொள்வது, சாதாரண பொதுமக்களை மேலும் காக்க வைக்குமென்பது குறிப்பிடத்தக்கது.



