தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று நடைபெறுகிறது. 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 14.59 லட்சம் பேர் முதல்முறை வாக்காளர்கள்.
தமிழகம் முழுவதும் 249 மாதிரி வாக்குச்சாவடிகள், 325 அனைத்து மகளிர் வாக்குச்சாவடிகள், 71 மாற்றுத் திறனாளிகள் பணியாற்றும் வாக்குச்சாவடிகள், 79 இளம் பணியாளர்கள் பணியாற்றும் வாக்குச்சாவடிகள் என மொத்தம் 33,211 இடங்களில் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
5,949 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு நுண்பார்வையாளர்கள், துப்பாக்கிய ஏந்திய போலீஸார் அல்லது துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீர், கழிவறை, தடையற்ற மின்சாரம், அவசர மருத்துவம், கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம், மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி, நிழற்பந்தல், வாக்காளர்களுக்கு உதவ தன்னார்வலர்கள் ஏற்பாடு என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டுசெல்ல அனுமதி இல்லை என்பதால், நுழைவுவாயிலில் செல்போனை பாதுகாப்பாக வைக்கவும் முதல்முறையாக வசதி செய்யப்பட்டுள்ளது.
இத்தேர்தலில் 1,06,408 வாக்குப்பதிவு இயந்திரங்கள், தலா 75,064 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கூடுதலாக 20 சதவீத இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.
துணை ராணுவம் ரோந்து: பாதுகாப்பு பணியில் துப்பாக்கி ஏந்திய 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் 24 மணி நேரமும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் 83,875 காவல் துறை பணியாளர்கள், 40,427 காவல் துறை அல்லாத முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட பணியாளர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்குச்சாவடி பணியில் சுமார் 3.40 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளவர்களில் நேற்று வரை 4.18 லட்சம் பேர் தபால் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி நேற்று காலை 11 மணி முதல் தொடங்கியது.
அதனுடன் உரிய படிவங்கள், சீல் வைக்க தேவையான அரக்கு, மெழுகுவத்தி, அழியாத அடையாள மை உள்ளிட்ட பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டன. சென்னையில் தேர்தல் பணிகளை, 10 நாடுகளைச் சேர்ந்த 20 பிரதிநிதிகள் கொண்ட சர்வதேசக் குழுவினர் நேற்று பார்வையிட்டனர்.
வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளின் உள்ளே மற்றும் வெளியே தலா ஒரு கண்காணிப்பு கேமரா என மொத்தம் 1.50 லட்சம் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் பதிவாகும் கேமரா காட்சிப் பதிவுகளை, சென்னையில் உள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இருந்து மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் உள்ள 18 அதிகாரிகள் கொண்ட குழுவினர் கண்காணிப்பார்கள் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று மேலும் கூறியபோது, ‘‘தேர்தல் பறக்கும் படைகள், நிலைக் கண்காணிப்பு குழுக்கள் மூலம் இதுவரை ரூ.1,262 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி அமைவிடம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை https://votervazhikatti.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெறும்.
வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குப்பதிவு இயந்திரங்கள், தமிழகம் முழுவதும் 63 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்படும்’’ என்றார்.
தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும் அரசு, தனியார், பொதுத் துறை நிறுவனங்களுக்கு இன்று பொது விடுமுறை விடப்பட்டுள்ளது.



