அவுஸ்திரேலியாவிற்கு செலுத்த வேண்டியிருந்த 22.9 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கான, கடன் தவணையாக திறைசேரியினால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர், கணினி ஹக்கர் (Hacker) ஒருவருக்குச் சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இன்று (22) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்ன இது தொடர்பான விடயங்களை உள்ளடக்கி சபாநாயகருக்குக் கடிதம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
அதற்கமைய, இது குறித்து ஆராய்ந்து விசாரணைகளை முன்னெடுப்பதா இல்லையா என்பது குறித்து சபாநாயகர் தீர்மானம் எடுப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
இன்றைய அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஊடகவியலாளர்கள் இவ்வாறு கேள்வி எழுப்பினர்,
கேள்வி: அரசாங்கத்தின் 2.5 மில்லியன் டொலர் பணம் காணாமல் போயுள்ளதா? இது தொடர்பாக விசேட தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, இலங்கை அரசாங்கம் 2025 செப்டம்பர் இறுதிக்குள் 22.9 மில்லியன் டொலர் கடனைச் செலுத்த வேண்டியிருந்த ஒரு நாட்டிற்கு, கடனைத் தீர்ப்பதற்காக 2025 டிசம்பர் முதல் 2026 ஜனவரி 31 வரையான காலப்பகுதியில் 2.5 மில்லியன் டொலரை திறைசேரி செலுத்தியுள்ளது. ஆனால், இந்தப் பணம் உரிய கடன் வழங்குநருக்குச் செல்லாமல் ஒரு கணினி ஹக்கருக்குச் சென்றுள்ளது. இது குறித்து நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் விசாரணைக் குழுவொன்றையும் நியமித்துள்ளது. நிதி அமைச்சு மற்றும் திறைசேரி போன்ற நாட்டின் பொருளாதார ரீதியாக மிக முக்கியமான நிறுவனங்களில் இவ்வாறான ஒன்று எப்படி நடந்தது? இந்தப் பணத்தைச் செலுத்த திறைசேரி செயலாளரின் அனுமதி கிடைத்ததா?
பதில்: ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்ன சபாநாயகருக்குச் சமர்ப்பித்த கடிதத்தின் அடிப்படையிலேயே நீங்கள் இதைக் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன்.
இது தொடர்பாக நிதி அமைச்சு விளக்கமளிக்கும். தற்போது இது குறித்த மேலதிக தகவல்கள் எம்மிடம் இல்லை. அந்தக் கடிதம் மட்டுமே இதற்கான ஆதாரமாக உள்ளது. விரைவில் நிதி அமைச்சு இது குறித்துத் தெளிவுபடுத்தும்.
கேள்வி: நிதி அமைச்சு ஏற்கனவே இது தொடர்பான விசாரணைகளை நடத்தி இரண்டு பணிப்பாளர்கள், ஒரு கணினி இயக்குபவர் மற்றும் மேலும் ஒருவரைப் பணியிடை நீக்கம் செய்துள்ளது. மைத்ரி குணரத்ன இது குறித்து விசேட பாராளுமன்ற குழுவொன்றின் ஊடாக விசாரணை நடத்துமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வேண்டுகோளுக்கு அரசாங்கத்தின் பதில் என்ன?
பதில்: இது தொடர்பான விடயங்களை ஆராய்ந்து பார்த்த பின்னரே சபாநாயகர் தீர்மானம் எடுப்பார். எனவே, பாராளுமன்றம் என்ற ரீதியில் விசாரணை நடத்தப்படுமா இல்லையா என்பதற்குச் சபாநாயகரே பதிலளிக்க வேண்டும். என்னிடம் தற்போது அந்தக் கடிதம் மாத்திரமே உள்ளது, மேலதிக விபரங்கள் இல்லை.



