26.8 C
Jaffna
January 19, 2025
Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

ரஷ்யா- உக்ரைன் தானிய ஏற்றுமதி ஒப்பந்தம்!

உக்ரேனிய கருங்கடல் துறைமுகங்களில் இருந்து தானிய ஏற்றுமதியை அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் ரஷ்ய மற்றும் உக்ரேனிய அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளனர். ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் ஆகியோர் இந்த ஒப்பந்தம் உலகளாவிய உணவு நெருக்கடியை குறைக்க உதவும் என்று கூறியுள்ளனர்.

போரிடும் அண்டை நாடுகளான ரஷ்யாவும், உக்ரைனும் உலகின் மிகப்பெரிய உணவு ஏற்றுமதி நாடுகளாகும். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை தொடர்ந்து, கருங்கடலை ரஷ்ய கடற்படை முற்றுகையிட்டது. இதன் விளைவாக உக்ரைனின் ஏற்றுமதி போருக்கு முந்தைய மட்டத்தில் ஆறில் ஒரு பங்காகக் குறைந்தது.

இதனால் உலகளவில் உணவுப்பஞ்ச அபாயம் ஏற்பட்டது. பொருட்களின் விலை அதிகரித்தது. இதனால் ஏழை நாடுகளில் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலைமையை சரி செய்ய, துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன், ஐ.நா செயலாளர் ஆகியோரின் முயற்சியில் ரஷ்யா, உக்ரைன் இடையே உணவுப்பொருள் விநியோக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு மற்றும் உக்ரைனின் உள்கட்டமைப்பு அமைச்சர் ஓலெக்சாண்டர் குப்ராகோவ் ஆகியோர் வெள்ளிக்கிழமை தனித்தனியாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஒரே மேசையில் உட்கார்ந்து கைகுலுக்குவதைத் தவிர்த்தனர்.

இஸ்தான்புல்லின் ஆடம்பரமான டோல்மாபாஸ் அரண்மனையில் எர்டோகன் மற்றும் குடெரெஸ் முன்னிலையில் கையெழுத்து விழா நடந்தது.

“இன்று, கருங்கடலில் ஒரு கலங்கரை விளக்கம் உள்ளது. முன்னெப்போதையும் விட அதிகமாக தேவைப்படும் உலகில் நம்பிக்கையின் சாத்தியக்கூறு தெரிகிறது. இந்த ஒப்பந்தம் திவால் விளிம்பில் உள்ள வளரும் நாடுகளுக்கும், பஞ்சத்தின் விளிம்பில் உள்ள மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கும் நிவாரணம் அளிக்கும்” என்று தான் நம்புவதாக குடெரெஸ் கூறினார்.

ஒப்பந்தத்தை முழுமையாக செயல்படுத்த ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு அழைப்பு விடுத்தார்.

வெள்ளிக்கிழமை ஒப்பந்தம் என்பது சுமார் 10 பில்லியன் டொலர் மதிப்புள்ள தானியங்கள் விற்பனைக்கு கிடைக்கும். கடந்த ஆண்டு அறுவடை செய்யப்பட்ட சுமார் 20 மில்லியன் தொன்கள் இப்போது ஏற்றுமதி செய்யப்படலாம் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார்.

ஒப்பந்தம் 120 நாட்களுக்கு செல்லுபடியாகும். மேலும் பேச்சுவார்த்தைகள் இல்லாமல் தானாகவே புதுப்பிக்கப்படும்.

ஐ.நா அதிகாரிகளின் கூற்றுப்படி, ஒப்பந்தத்தின் கீழ், உக்ரேனிய மற்றும் ரஷ்யப் படைகளால் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்ட கருங்கடல் வழியாக முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பாதையில் செல்வதற்கு முன், உக்ரேனிய துறைமுகங்களில் உள்ள கப்பல்களில் தானியங்களை ஏற்றுவதை துருக்கிய, உக்ரேனிய மற்றும் ஐ.நா ஊழியர்களின் கூட்டமைப்பு, கண்காணிக்கும்.

உக்ரேனிய பைலட் கப்பல்கள் உக்ரேனிய தரப்பால் வழங்கப்பட்ட பாதுகாப்பான வழி வரைபடத்தைப் பயன்படுத்தி கடற்கரையைச் சுற்றியுள்ள அனுமதிக்கப்பட்ட பாதைகள் வழியாக செல்ல, தானியங்களைக் கொண்டு செல்லும் வணிகக் கப்பல்களுக்கு வழிகாட்டும்.

கப்பல்கள் கருங்கடலைக் கடந்து துருக்கியின் பொஸ்பரஸ் ஜலசந்தியை நோக்கிச் செல்லும்.

அதே நேரத்தில் ஐ.நா, உக்ரைன், ரஷ்யா மற்றும் துருக்கியின் பிரதிநிதிகளைக் கொண்ட இஸ்தான்புல்லில் உள்ள ஒரு கூட்டு ஒருங்கிணைப்பு மையத்தால் நெருக்கமாக கண்காணிக்கப்படும்.

இதேவேளை, உக்ரைனுக்கு கப்பல்கள் மூலம் ஆயுதங்கள் கொண்டு வரப்படலாம் என்று ரஷ்யா கவலை கொண்டுள்ளது. உலக சந்தைகளுக்கு அதன் தானிய விநியோகத்தின் பாதுகாப்பில் உக்ரைன் அக்கறை கொண்டுள்ளது. அதன்படி, உக்ரைனுக்குள் நுழையும் கப்பல்கள் அதே கூட்டு ஒருங்கிணைப்பு மையத்தின் மேற்பார்வையில் ஆயுதம் ஏற்றப்படவில்லை என்பதை உறுதி செய்ய ஆய்வு செய்யப்படும். ரஷ்ய மற்றும் உக்ரைனிய தரப்பினர் முக்கிய தானியங்களை கொண்டு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள வணிகக் கப்பல்கள் அல்லது துறைமுகங்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்திக் கொள்ளும், அதே நேரத்தில் ஐ.நா மற்றும் துருக்கிய கண்காணிப்பாளர்கள் உக்ரைனிய துறைமுகங்களில் ஒப்பந்தத்தால் பாதுகாக்கப்பட்ட பகுதிகளை நிர்ணயிப்பார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

2025ம் ஆண்டுக்கான ஒஸ்கர் விருது விழா ரத்தாகுமா?

east tamil

கவிழ்ந்த கொள்கலனில் பெற்றோல் எடுத்த 70 பேர் எரிந்து பலி

Pagetamil

காஸா எல்லையில் இன்று போர் நிறுத்தம்

east tamil

படகு கவிழ்ந்து 40 பாகிஸ்தானியர்கள் பலி

east tamil

அமெரிக்காவில் டிக்டொக் செயலிக்குத் தடை

east tamil

Leave a Comment