தற்போதைய நெருக்கடியை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தீர்க்க முடியாது என்று தான் கருதுவதாகவும், இந்த நெருக்கடியை இரண்டு ஆண்டுகளில் தீர்ப்பதா அல்லது 5 முதல் 10 ஆண்டுகளுக்கு இழுப்பதா என்பதை அரசியல்வாதிகள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் நிதியமைச்சர் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் ஆற்றிய விசேட உரையின் போதே, இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வரி அதிகரித்திருக்க வேண்டிய நேரத்தில் வரியைக் குறைத்தோம். இது வரலாற்று தவறு என்பதை ஒப்புக்கொள்கிறேன். மீன் பிடிக்க தூண்டிலை கொடுப்பதற்குப் பதிலாக மீனைக் கொடுத்ததன் விளைவை இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். தற்போது நாட்டில் பயன்படுத்தக்கூடிய வெவளிநாட்டு நாணயக் கையிருப்பு 50 மில்லியன் டொலரை விடவும் குறைவாகவே உள்ளது.
வரி வருவாய் தற்போது 24 சதவீதத்தில் இருந்து 8.6 சதவீதமாக குறைந்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் மொத்த வருமானம் 1464 பில்லியன் ரூபாவாகும் அதேவேளை 2021 ஆம் ஆண்டில் அரசாங்கச் செலவு 3522 பில்லியன் ரூபாவாகும். செலவினமானது வருமானத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும் அதே வேளையில் 2748 பில்லியன் ரூபா தொடர் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டது.
கடந்த வருடம் வேதனத்திற்காக மாத்திரம் 845 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக ஓய்வூதியம், விசேட தேவையுடையோர் கொடுப்பனவு, சமுர்த்தி கொடுப்பனவு, அத்தியாவசிய மருந்து கொள்வனவு, பாடசாலை புத்தகம் மற்றும் சீருடை உற்பத்தி என்பனவற்றுக்கு 595 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இவ்வாறான செலவினமானது நாட்டிற்கு கிடைக்கப்பெற்ற வருமானத்தை காட்டிலும், அதிகமாகும்.
அதேநேரம், 1956ஆம் ஆண்டு முதல் இலங்கை, வெளிநாடுகளில் இருந்து கடன்பெற ஆரம்பித்தது. 1956ஆம் ஆண்டு முதலாவதாக 6 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையை பெற்றிருந்தோம்.
அது, தற்போது உள்ள தரவுகளின் அடிப்படையில் 51 பில்லியன் அமெரிக்க டொலர் கடனாக உயர்வடைந்துள்ளது.
கடந்த 2 வருடங்களில் வெளிநாடுகளில் இருந்து கடன் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும், கடந்த 2 வருடங்களில் வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட கடன்தொகைக்கான வட்டியாக 8 பில்லியன் அமெரிக்க டொலரை செலுத்தியிருக்கின்றோம்.
நாடு தற்போது பாரிய பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது. அதனை உடனடியாக தடுத்து முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு, அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவையுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமைக்கு சீனா ஆரம்பத்தில் தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தது. எனினும், நேற்று முன்தினம் சீனாவுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில், அந்த நிலைப்பாடு மாற்றம் பெற்றுள்ளது.
இந்த நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள குறைந்த பட்சம் 6 மாதங்கள் வரை செல்லும்.
உலக வங்கியின் 400 மில்லியன் அமெரிக்க டொலர் உதவியை 700 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்த பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் இந்தியா ஆகியவை அத்தியாவசிய மருந்துகளை வாங்குவதற்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என நிதியமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நிதியமைச்சராக இந்த பொருளாதார நெருக்கடி சமயத்தில், நைட் வோர்ச்மன் (கிரிக்கெட்) பணியையே ஆற்றி வருகிறேன் என்றும் தெரிவித்தார்.




