முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி செல்வபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மாணவிகள் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குடும்ப தேவைக்கான பொருட்களுடன் இரண்டு துவிச்சக்கரவண்டியில் தனித்தனியாக பயணித்துக்கொண்டிருந்த மாணவிகள் மீது, பின்னால் பயணித்த ரிப்பர் மோதியுள்ளது.
இதன் போது ஒரே குடும்பத்தை சேர்ந்த பாடசாலை கல்வியை தொடரும் இரு மாணவிகள் படுகாயமடைந்த நிலையில் பொதுமக்களின் உதவியுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தை அடுத்து அங்கு சென்ற பொலிசார் விசாரணைகளின் பின்னர் வாகனத்தையும், சாரதியையும் கைது செய்துள்ளதாக தெரிவித்து, அதே சாரதியைக் கொண்டு வாகனத்தை எடுக்க முற்பட்ட போது கூடியிருந்த மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸ் உயரதிகாரி, குற்ற செயல் தொடர்பில் நீதியான விசாரணைக்குட்படுத்தப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படும் என வாக்குறுதி அளித்ததுடன், பிரிதொரு சாரதி ஒருவரின் உதவியுடன் விபத்துடன் தொடர்புடைய சாரதியையும், ரிப்பர் வாகனத்தையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
படுகாயமடைந்த இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.