எகிப்தில் அரச வம்சாவளியைச் சேர்ந்த 3,500 ஆண்டு பழமையான மம்மி ஒன்றின் புதிர்கள், டிஜிட்டல் முறையில் அவிழ்க்கப்பட்டுள்ளன. 1881 ஆம் ஆண்டில் மம்மி கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து முதல் முறையாக எகிப்திய மன்னர் ஒருவரின் வாழ்க்கை மற்றும் இறப்பு பற்றிய விவரம் டிஜிட்டல் முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பார்வோன் முதலாம் அமென்ஹோடெப் மன்னரின் எச்சங்களே, மம்மி செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
பதப்படுத்தப்பட்ட கைத்தறித் துணியைக்கூட அகற்றாமல் அதன் அடையாளத்தைக் கண்டறிந்துள்ளனர் ஆய்வாளர்கள்.
துணியால் சுற்றப்பட்ட மம்மியை டிஜிட்டல் நுட்பங்களைப் பயன்படுத்தி, எகிப்திய விஞ்ஞானிகள் முப்பரிமாண கணினிமயமாக்கப்பட்ட டோமோகிராஃபி (CT) ஸ்கேனிங்கைப் பயன்படுத்தி 3,500 ஆண்டுகள் பழமையான மம்மியின் உள்ளடக்கங்களை ஆய்வு செய்தனர்.
அந்த மம்மியில் கி.மு 1525ஆம் ஆண்டிலிருந்து 1504ஆம் ஆண்டு வரை ஆண்ட பார்வோன் முதலாம் அமென்ஹோடெப் இன் பதப்படுத்தப்பட்ட உடல் இருப்பது கண்டறியப்பட்டது.
அந்த மம்மி சுமார் 140 ஆண்டுகளுக்கு முன்பாக- 1881 இல்- டெர் எல் பஹாரியில் முதல்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது.
அதற்குள் பதப்படுத்தப்பட்டிருப்பது யாருடைய உடல் என்பதை ஆய்வாளர்கள் அடையாளங்காண இத்தனை ஆண்டுகள் ஆகியுள்ளன.
புதிய மின்னிலக்க முறையின் மூலம் மம்மியைப் பற்றிய பல தகவல்கள் வெளியுலகுக்கு வந்தன.
அவர் 35வது வயதில் உயிரிழந்ததும், அவரின் மூளை இன்னமும் உடலுக்குள் இருப்பதும் தெரியவந்தது.
அவர் விருத்தசேதனம் செய்யப்பட்டிருந்தார். ஆரோக்கியமான பற்கள் கொண்டிருந்தார். சுமார் 30 தாயத்துக்கள் மற்றும் ஒரு தனித்துவமான தங்கக் கச்சை கண்டெடுக்கப்பட்டது.
குறுகிய கன்னம், ஒரு சிறிய குறுகிய மூக்கு, சுருள் முடி மற்றும் லேசாக நீண்டு செல்லும் மேல் பற்கள் இருந்தன.
அவரது மரணத்திற்கான காரணத்தை விளக்கும் காயங்கள் அல்லது சிதைவுகள் எதுவும் கண்டறியப்படவில்லை.
கிமு 1525 மற்றும் 1504 க்கு இடையில் சுமார் 21 ஆண்டுகள் எகிப்தை ஆண்டவர் முதலாம் அமென்ஹோடெப். ஹைக்சோஸைக் கைப்பற்றி, பண்டைய எகிப்திய நாகரிகத்தின் புதிய இராச்சியத்தை நிறுவிய மன்னன் முதலாம் அஹ்மோஸ் மகனே அமென்ஹோடெப் ஆவார். அவர் பல கோயில்களைக் கட்டி, அமைதியான ஆட்சியைக் கொண்டிருந்தார்.
எகிப்திய வரலாற்றுச் சிறப்புமிக்க ரகசியங்களைக் கண்டறிய இந்தப் புதிய தொழில்நுட்பம் உதவும் என்பது நம்பப்படுகிறது.




