வவுனியா, அனுராதபுரம், குருநாகல், கண்டி மற்றும் பதுளை ஆகிய பகுதிகளில் உள்ள பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பணிப்பாளர் பொறியியலாளர் டி அபேசிறிவர்தன தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் யோதவெவ மற்றும் மருதமடு குளம், பதுளை அபேவெல்ல நீர்த்தேக்கம், கண்டி நாலந்த குளம், அனுராதபுரத்தில் திஸ்ஸவெவ, கிம்புல்வான வெவ மற்றும் குருநாகல் பத்தலகொட வெவ ஆகியன நிரம்பி வழிகின்றன.
இதேவேளை,
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்த சில நாள்களில் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் குறிப்பாக மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.