கத்தோலிக்க தேவாலயங்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என வெளியாகும் தகவல், குறித்த அதிகாரிகளால் ஆராய்ந்து பார்க்காமலும், உறுதிப்படுத்தப்படாமலும் வெளியிடப்பட்டதொரு தகவல் என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் குழப்பமடைய தேவையில்லை எனவும் தெரிவித்தார்.
வத்தளை, போப்பிட்டிய தேவாலயத்தின் மீது பயங்கரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்படக்கூடும் என்று தமக்கு கிடைத்த தகவலை அறிவிப்பதற்காகக் கடற்படையைச் சேர்ந்த இருவர் நேற்று அந்த தேவாலயத்துக்கு சென்றுள்ளனர்.
அதன்போது, தேவாலயத்தில் பொறுப்பான யாரும் இல்லாதிருந்ததால், அங்கிருந்த பணிப்பெண் ஒருவரிடம் அவ்விடயத்தை கூறிச்சென்றிருந்தனர்.
தேவாலயத்துக்குப் பொறுப்பான அருட்தந்தை, தேவாலயத்துக்கு வந்ததும் குண்டுத்தாக்குதல் எச்சரிக்கை தொடர்பில் ஆராய்ந்து பார்த்தபோது, வேறு எந்த தேவாலயத்துக்கோ, ஆயர் இல்லத்துக்கோ இது போன்ற எச்சரிக்கை கிடைத்திருக்கவில்லை என்பது தெரியவந்திருந்தது.
எனினும், இந்த அறிவித்தலின் பின்னர் தேவாலயத்துக்கு வந்த மேலுமொரு கடற்படை அதிகாரி ஏற்கனவே வழங்கப்பட்ட எச்சரிக்கை தொடர்பில் விபரித்ததாக அவர் தெரிவித்தார்.




