நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஆகக்குறைந்தது 3 வாரங்களுக்கு நாட்டை முடக்குமாறும், ஆளும் கட்சியின் பங்காளிகள் கோரியுள்ளனர்.
ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் 10 பங்காளி கட்சிகளே மேற்கண்டவாறு கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
7 விடயங்களை சுட்டிக்காட்டி இந்த கடிதத்தை அனுப்பியுள்ளனர். அதில் தடுப்பூசி திட்டத்தை வினைத்திறனாக்குவது, கொரோனா தொடர்பான தரவுகளை திட்டமிட்டு சிதைக்கும் அதிகாரிகள் மீது தராதரம் பார்க்காது நடவடிக்கை எடுத்தல், வைரஸ் கட்டுப்பாட்டில் வினைத்திறனான ஆயுர்வேத மருந்துகளையும் சிகிச்சைக்கு பயன்படுத்துவது தொடர்பாக கவனம் செலுத்தல் உள்ளிட்ட விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளனர்.
நமது மக்கள் சக்தி தலைவர் அதுரலிய ரத்ன தேரர், இடசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, ஐக்கிய தேசிய மக்கள் கட்சித் தலைவர் டிரான் அலஸ், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டொக்டர் ஜி. வீரசிங்க, இலங்கை மக்கள் கட்சியின் தலைவர் அசங்க நவரத்ன, கடமைகளுக்கான தேசிய அமைப்பின் தலைவர் கெவிது குமாரதுங்க மற்றும் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா ஆகியோர் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.