பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட விதிமுறைகளை அமல்படுத்துவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இன்று (05) இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.
இந்த இடைக்கால உத்தரவு, அடுத்த வழக்கு தினமாக ஓகஸ்ட் 24 ஆம் திகதி வரை அமலில் இருக்கும்.
விதிமுறைகளை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் லக்நாத் ஜெயக்கொடி, கவிந்திய கிறிஸ்தோபர் தோமஸ், மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து, ஸ்ரீன் சரூர் ஆகியோர் தாக்கல் செய்த மூன்று அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலித்த பிறகு உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.
இந்த மனுக்களை நீதிபதிகள் முர்து பெர்னாண்டோ, யசந்த கொட்டகொட மற்றும் அச்சலா வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் மார்ச் 12 அன்று வெளியிடப்பட்ட சிறப்பு வர்த்தமானி அறிவிப்பிற்கு எதிராகவே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
பயங்கரவாத மற்றும் மத தீவிரவாத சிந்தனையுடைய நபர்களிற்கு புனர்வாழ்வளிக்கும் இந்த ஏற்பாட்டின் மூலம் எந்தவொரு நீதித்துறை நடவடிக்கைகளும் இல்லாமல் எந்த நபரையும் கைது செய்து சிறையில் அடைக்க முடியும் என்றும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது தங்களின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதாக மனுதாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த விதிமுறைகள் அரசியலமைப்பின் பிரிவு 10, 11, 12.1, 12.2, 13.1, 13.2, 13.4, 13.5, 13.6, 13.1 (பி), 14.1 (ஈ) மற்றும் 17 ஆகியவற்றை நேரடியாக மீறுவதால், இந்த மனுக்கள் விசாரணைக்கு அனுமதிக்கப்படுகின்றன. மனுதாரர்கள் இந்த விதிமுறையை அமல்படுத்துவதைத் தடுக்க உத்தரவு கோருகின்றனர், இது தங்களின் மற்றும் நாட்டின் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக அறிவிக்க கோரியுள்ளனர்.