இலங்கை சுதந்திரக் கட்சிக்கும், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிற்குமிடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
பொதுஜன பெரமுனவிற்குள் மோதல்கள் உச்சமடைந்துள்ளன. அரசாங்கம் தன்மை கணக்கிலெடுப்பதில்லையென சு.க கடும் அதிருப்தியில் உள்ளது.
தமது உள்ளூராட்சி பிரதிநிதிகளை அரசாங்கம் புறக்கணிப்பதாகவும், அரசாங்க விவகாரங்களில் தொகுதி அமைப்பாளர்களை கணக்கிலெடுப்பதில்லையென்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி பலமுறை குற்றம் சாட்டியுள்ளது.
சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகரவும் அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார்.
இலங்கை சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம், கடந்த வியாழக்கிழமை இரவு கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது. அப்போது, அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து நீண்ட விவாதம் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் அரசாங்கத்தை விட்டு சு.க வெளியேற வேண்டும் என்று சிலர் பரிந்துரைத்திருந்தனர். இருப்பினும், இதுபோன்ற ஒரு முடிவை இந்த நேரத்தில் எடுக்கக்கூடாது என்று மத்திய குழுவின் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த சூழ்நிலையில், பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஜனாதிபதியை சந்திக்க சு.க முடிவு செய்துள்ளது. 21ஆம் திகதி சந்திப்பிற்கு வருமாறு ஜனாதிபதி தரபபிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



