பங்களாதேஷின், நாராயங்கஞ்சில் ஜூஸ் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு இன்னும் அதிகரிக்கும் என அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாலை 5:30 மணி நிலவரப்படி, நாராயங்கஞ்ச் மற்றும் டாக்காவிலிருந்து 18 தீயணைப்புப் பிரிவுகள் தீயணைப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கட்டிடத்தின் நான்காவது மற்றும் ஐந்தாவது தளங்களில் இருந்து புகை வெளியேறிக் கொண்டிருக்கின்றது. அங்கு தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்தன.
பெரும்பாலான தொழிலாளர்கள் தஞ்சம் புகுந்த கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து 49 சடலங்கள் மீட்கப்பட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். டாக்கா மருத்துவக் கல்லூரியில் டி.என்.ஏ பரிசோதனைகள் நடத்தப்பட்டு அவற்றை அடையாளம் காணும் பணி நடைபெறும்.
வியாழக்கிழமை, நாராயங்கஞ் மாவட்டத்தின் பூல்டா, கோர்னோகாப் பகுதியில்.ரூப்கஞ்ச் என்ற இடத்தில், சஜீப் குழுமத்தின் ஹஷேம் ஃபுட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஆறு மாடி தொழிற்சாலை கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
ஜனாதிபதி அப்துல் ஹமீத் மற்றும் பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோர் தீ விபத்து மற்றும் மரணங்கள் குறித்து ஆழ்ந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மாவட்ட நிர்வாகத்தால் ஏழு பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.