ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலளித்த இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாரா குறித்துப் பேசியுள்ளார்.
‘போடா போடி’ திரைப்படம் மூலம் 2012ஆம் ஆண்டு இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். 2015ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் ‘நானும் ரவுடிதான்’ படத்தை இயக்கியிருந்தார். இந்த சமயத்திலிருந்தே விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலிப்பதாகக் கூறப்படுகிறது.
பொதுவில் இருவரும் இதுபற்றி இதுவரை வெளிப்படையாக எதுவும் பேசியதில்லை என்றாலும் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படங்களை இருவருமே தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் அடிக்கடி பகிர்ந்து வருகின்றனர். அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்களுக்கும் சென்று வருகின்றனர். இருவரும் சேர்ந்து ரவுடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் பதிலளித்துள்ளார். இதில் ஒரு ரசிகர், உங்களுக்கு நயன்தாராவிடம் பிடித்த விஷயம் எது என்று கேட்க, அவரது தன்னம்பிக்கைதான் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் என்று விக்னேஷ் சிவன் பதிலளித்துள்ளார்.
மற்றொரு ரசிகர், நயனுடன் நீங்கள் எடுத்துக்கொண்டதில் மிகவும் பிடித்த புகைப்படம் எது என்று கேட்டதற்கு, அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து விக்னேஷ் சிவன் பதில் கூறியுள்ளார்.
அடுத்ததாக விக்னேஷ் சிவன் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தை இயக்கியும், இணைந்து தயாரித்தும் வருகிறார்.