மிக மிக அரிதான 15.81 கேரட் ஊதா இளஞ்சிவப்பு (purple pink) வைரம் ஹாங் காங்கில் பல மில்லியன் டாலருக்கு விற்பனையாகியுள்ளது. கிறிஸ்டிஸ் நிறுவனம் நடத்திய இந்த ஏலத்தில், ஊதா இளஞ்சிவப்பு நிறத்திலான அரிய வைரம் 29.3 மில்லியன் டாலருக்கு விலை போனது.
ஒரு ஊதா இளஞ்சிவப்பு வைரம் இவ்வளவு பெரிய தொகைக்கு விலை போனது உலகிலேயே இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வைரத்துக்கு ‘தி சாகுரா’ என பெயரிடப்பட்டுள்ளது. சாகுரா என்றால் ஜப்பானிய மொழியில் செரி மலர் என பொருள்.
இதற்கு முன் 2020ஆம் ஆண்டு நவ்வம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற ஏலத்தில் 14.8 கேரட் ஊதா இளஞ்சிவப்பு வைரம் 27 மில்லியன் டாலருக்கு விலை போனது. இந்த சாதனையை முறியடித்து தற்போது சாகுரா வைரம் 29.3 மில்லியன் டாலருக்கு விற்பனையாகியுள்ளது.
சாகுராவுடன் மற்றொரு 4.2 கேரட் இளஞ்சிவப்பு வைரம் 6.6 மில்லியன் டாலருக்கு விலை போனது. சாகுரா வைரம் மிக மிக அரிதான வைரம் என கிறிஸ்டிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏனெனில், உலகில் கிடைக்கும் இளஞ்சிவப்பு வைரங்களில் வெறும் 10% வைரங்கள் மட்டுமே 0.2 கேரட்டுக்கு மேல் இருக்கின்றன.
சாகுரா வைரம் 2017ஆம் ஆண்டு ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் ஒரிஜினல் எடை 27.8 கேரட். ரஷ்யாவில் கிடைத்த மிகப்பெரிய இளஞ்சிவப்பு வைரம் இதுதான்.
உலகிலேயே மிகப்பெரிய விலைக்கு விற்பனையான வைரத்தை பொறுத்தவரை, 2017ஆம் ஆண்டு ஹாங் காங்கில் 59.6 கேரட் இளஞ்சிவப்பு வைரம் 71.2 மில்லியன் டாலருக்கு விலை போனது.