உள்ளிருந்தால் உணவு யார் தருவாங்க என்று சமூக வலைதளவாசி ஒருவர் பார்த்திபனிடம் கேட்க அவரோ, சரியான செருப்படிக் கேள்வி என்று கூறி நெத்தியடி பதில் அளித்திருக்கிறார்.
கொரோனாவின் இரண்டாம் அலையால் இந்திய மக்கள் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் நேற்று தமிழக மக்கள் ஷாப்பிங் சென்றதை பார்த்த பிற மாநிலத்தவர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு.
கடைத்தெருக்கள் திருவிழாக்கோலம் பூண்டிருந்தன. அட, காய்கறி கடைகளை விட துணிக் கடைகளில் தான் மக்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளி என்றால் கிலோ எவ்வளவு சார் என்று கேட்பது போன்று மக்கள் போட்டி போட்டுக் கொண்டு துணி வாங்கிச் சென்றார்கள்.
நேற்று ஒரு நாளில் மட்டும் பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். துணி, காய்கறி, பழங்களுடன் கொரோனா வைரஸை இலவசமாக வாங்கிச் சென்றிருக்கிறார்கள் என்று மீம்ஸ் கிரியேட்டர்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
வீட்டிலேயே இருங்கள், தேவை என்றால் மட்டுமே வெளியே வாங்க என்று சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி உள்ளிட்டோர் தமிழக அரசு சார்பில் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோக்கள் எல்லாம் குப்பைக்கு போய்விட்டது.
இந்நிலையில் வார்த்தையுடன் விளையாடும் பார்த்திபன் உள்ளிருப்பு பற்றி ட்வீட் செய்தார். அவர் கூறியதாவது,
நாளை சிரிக்க- சிறக்க..
இன்று உள்ளிருப்போம் உறவே! என்றார்.
அவரின் ட்வீட்டை பார்த்த ஒருவரோ, உள்ளிருந்தா உணவு யாரு தருவாங்க என்று கேட்டார். அதற்கு பார்த்திபனோ, சரியான செருப்படிக் கேள்வி. கொரோனாவை குறைவான மிருகமாக்கிவிடுகிறது பசி. இருந்தாலும் உள் இருந்தா … உணவை உண்ண நாமிருப்போம் -நாளை!
இல்லையெனில் நம்மை உண்ண மண்ணிருக்கும் என்று பதில் அளித்தார்.
பார்த்திபனின் பதிலை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது,
சார், நீங்கள் சொல்வது மிகச் சரியே. ஆனால் வீட்டிலேயே இருந்தால் எல்லோராலும் தினமும் மூன்று வேளை சாப்பிட முடியாது. அன்றாடம் உழைத்தால் தான் சோறு என்று இருப்பவர்கள் பசியும், பட்டினியுமாக நாட்களை கடத்துகிறார்கள்.
காசு இருப்பவர்களோ, ஜாலியாக ஷாப்பிங் செல்கிறார்கள் என்றனர்.