இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக யாழ்ப்பாணத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்த குடும்பத்தில் ஒருவருக்கும், அவர்களிற்கு அடைக்கலம் கொடுத்த குடும்ப உறுப்பினருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தின் அரிச்சலூ்ர் முகாமில் தங்கியிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கடந்த 7ஆம் திகதியளவில் இலங்கை வந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
55 வயதான தாய், 35 வயதான மகள், 9,4 வயதுடைய அவர்களின் மகன்கள் ஆகியோரே இவ்வாறு இலங்கை வந்தனர்.
இவர்கள் மன்னார் வழியாக யாழ்ப்பாணத்திற்கு வந்து, குருநகரில் தங்கியிருந்த நிலையில் நேற்று பொலிசாரால் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.
அவர்களின் பிசிஆர் மாதிரிகள் இன்று காலை பெறப்பட்டன.
9 வயதான சிறுவன் தொற்றிற்குள்ளானது உறுதியாகியுள்ளது. அத்துடன், வீட்டு உரிமையாளரான 55 வயதான பெண்ணும் தொற்றிற்குள்ளாகியுள்ளார்.
இவர்கள் இந்தியாவில் பரவும் உருத்திரிபடையும் வைரசினால் பாதிக்கப்பட்டார்களா அல்லது இலங்கை வந்த பின் தொற்றிற்குள்ளானார்களா என்பது மேலதிக பரிசோதனையின் பின்னரே தெரிய வரும்.
இந்திய வைரசினால் பாதிக்கப்பட்டிருந்தால் வடக்கில் ஆபத்தான நிலைமை உருவாகுமென்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்திய வைரஸ் அபாயத்தை மறுத்துள்ளனர். இந்தியாவிலிருந்து வந்த சிறுவன், இலங்கை வந்த பின்னரே தொற்றிற்குள்ளாகியிருக்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவன் இலங்கை வந்த பின்னர், வீட்டு உரிமையாளரான 55 வயதான பெண்ணின் மூலம் தொற்றிற்குள்ளாகியிருக்கலாமென ஊகிக்கப்படுகிறது.
இதுதான் வாய்ப்பெனினும், அதுவும் ஆபத்தான நிலையென சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குருநகரில் வீட்டில் இருந்த 55 வயதான பெண் தொற்றிற்குள்ளாகியுள்ளதால், குருநகர் பகுதியில் அடுத்த சில நாட்களில் எழுமாற்றான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.




