மகாராஷ்டிராவில் மாநிலம் தழுவிய ஊரடங்கு காரணமாக மதுபானம் கிடைக்காததால், சானிட்டைசரைக் குடித்து மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டத்தின் வாணி கிராமத்தில் நேற்று பிற்பகல் இந்த சம்பவம் நடந்தது. சானிட்டைசரைக் குடித்த பின்னர் மூவரும் வாந்தி எடுத்ததோடு, வாய், வயிறு போன்ற பகுதிகளில் தீக்காயங்கள் தொடர்பான புகார்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
வாணி காவல் நிலைய புலனாய்வு அதிகாரி டி.பி.பாடிகர் கூறுகையில், மதுக்கடைகள் மூடப்பட்டிருப்பதால் அந்த மூன்று பேரும் மதுபானத்திற்கு பதிலாக சானிட்டைசர் குடித்ததாகக் கூறப்படுகிறது.
“முதற்கட்ட விசாரணையின்படி, அவர்களால் எங்கிருந்தும் மதுபானம் பெற முடியவில்லை. எனவே அவர்கள் சானிட்டைசர் பாட்டிலை எடுத்து குடிக்க விரும்பினர். அதில் கணிசமான அளவு ஆல்கஹால் உள்ளது. அவர்கள் இன்று அதிகாலையில் உள்ளூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் இறந்தனர்.” என்று பாடிகர் கூறினார்.
உயிரிழந்த இருவரி 42 வயதான தத்தா லங்கேவர் மற்றும் 35 வயதான சுனில் டெங்டே என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் மூன்றாவது பாதிக்கப்பட்டவரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என அவர் கூறினார்.
வாணி காவல்துறையினர் இதை தற்செயலான மரண வழக்கு என பதிவு செய்துள்ளனர். சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.



