தனக்கு கொரோனா தொற்று என்று வெளியாகியுள்ள செய்திகளுக்கு அஞ்சலி மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீராம் வேணு இயக்கத்தில் பவன் கல்யாண், பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வக்கீல் சாப்’ படத்தை தில் ராஜு மற்றும் போனி கபூர் இணைந்து தயாரித்துள்ளனர். அரசியலிலிருந்து மீண்டும் திரையுலகிற்கு திரும்பியுள்ள பவன் கல்யாண் நடித்த படம் என்பதால் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இதில் நடித்துள்ள நிவேதா தாமஸுக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்று அதிகரித்து வரும் இந்தச் சமயத்தில் அஞ்சலிக்கும்கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதற்கு அஞ்சலி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அஞ்சலி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“எனக்குக் கொரோனா தொற்று இல்லை என்பதை எனது நல விரும்பிகள், நண்பர்கள், அன்பார்ந்த ரசிகர்கள் என அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.எனக்கு தொற்று இருப்பதாகச் சில செய்திகள், இணையக் கட்டுரைகள் என் கவனத்தில் வந்தன. அவை முழுக்க பொய்யான தகவல்களாகும். நான் பாதுகாப்பாக, ஆரோக்கியமாக, நலமுடன் இருக்கிறேன். பாதுகாப்பாக இருங்கள். உங்கள் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்”
இவ்வாறு அஞ்சலி தெரிவித்துள்ளார்.