தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் தளபதிகளின் புகைப்படங்கள் அடங்கிய ரிக்டொக் வீடியோக்களை தனது கையடக்க தொலைபேசியில் சேமித்து வைத்திருந்த இளைஞன் ஒருவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காங்கேசன்துறையை சேர்ந்த 23 வயதான இளைஞன் ஒருவரை கோப்பாய் பொலிசார் நேற்று (7) நீதிமன்றத்தில் முற்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் ஆவா குழு தலைவனின் பிறந்ததின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்படுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. பிறந்ததின நிகழ்வில் கலந்துகொண்டனர் என்ற சந்தேகத்தில் உரும்பிராயில் வைத்து 3 இளைஞர்களை கோப்பாய் பொலிசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் பிறந்ததின நிகழ்வில் கலந்துகொள்ளவில்லையென்பது தெரிய வந்தது.
இதையடுத்து நேற்று அவர்களை பொலிஸ் பிணையில் விடுவிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டது. இதன்போது இளைஞர்களின் கையடக்க தொலைபேசியை பொலிசார் ஆராய்ந்தபோது, இளைஞர் ஒருவரின் கையடக்க தொவைபேசியில் விடுதலைப் புலிகள் தொடர்புபட்ட ரிக்ரொக் வீடியோக்கள் காணப்பட்டன. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், மற்றும் சு.ப.தமிழ்செல்வன், பால்ராஜ் உள்ளிட்டவர்களின் வீடியோக்கள் அதிலிருந்தன.
அவர் ரிக்ரொக் வீடியோக்கள் பார்த்த போது, கையடக்க தொலைபேசி நினைவகத்தில் அந்த வீடியோக்கள் பதிவாகியுள்ளன.
எனினும், அவரது கையடக்க தொலைபேசி நினைவகத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பின் வீடியோக்கள் இருந்ததன் அடிப்படையில், அவர் நேற்று யாழ்ப்பாண நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
எதிர்வரும் 21ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.