அதையும் தாண்டி பெரியது… ? யாழில் கட்சி, கொள்கைகளை விட ஆதிக்கம் செலுத்திய ‘சாதி’; உள்ளூராட்சி தெரிவுகளின் இருண்ட பக்கங்கள்

Date:

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சிமன்றங்களின் தவிசாளர் தெரிவுகள் நிறைவுபெற்றுள்ளன.

இலங்கை தமிழ் அரசு கட்சி, ஈ.பி.டி.பி, மணிவண்ணன் குழு இணைந்த கூட்டணி- யாழ் மாநகரசபை, பருத்தித்துறை, வடமராட்சி தெற்கு மேற்கு, வலிகாமம் வடக்கு, வலிகாமம் மேற்கு, வலிகாமம் தென்மேற்கு, வலிகாமம் தெற்கு, வேலணை, நல்லூர், நெடுந்தீவு, சாவகச்சேரி பிரதேசசபைகளை கைப்பற்றியுள்ளது.

தமிழ் தேசிய பேரவை, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அணி- சாவகச்சேரி, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை நகரசபைகளையும், ஊர்காவற்துறை, வலிகாமம் கிழக்கு பிரதேசசபைகளையும் கைப்பற்றியுள்ளன.

மணிவண்ணன் அணி, இலங்கை தமிழ் அரசு கட்சியை கழற்றிவிட்டு, தமிழ் தேசிய பேரவை மற்றும் சுயேச்சைக்குழுவுடன் இணைந்து காரைநகர் பிரதேசசபையை கைப்பற்ற ஆதரவளித்தது.

யாழில் உள்ள உள்ளூராட்சிசபைகளில் இலங்கை தமிழ் அரசு கட்சி 10 சபைகளை கைப்பற்றியுள்ளது. அதன் கூட்டணிகளான மணி குழு நல்லூர் பிரதேசசபையை கைப்பற்றியுள்ளது. ஈ.பி.டி.பிக்கு எதுவுமில்லை.

தமிழ் தேசிய பேரவை-  4 சபைகளையும், அதன் கூட்டணியான ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 1 சபையையும்  என 5 சபைகளை கைப்பற்றியுள்ளன.

காரைநகர் சுயேட்சைகள் வசம்.

இந்த தவிசாளர் தெரிவுகளில் இரகசிய வாக்கெடுப்பு முறை நடந்தாலே, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வெற்றிபெற்றுவிடும் பிரகாசமான வாய்ப்புக்கள் இருந்தன. இதனால்தான், தமிழரசு கட்சி உறுப்பினர்கள் யாரும் இரகசிய வாக்கெடுப்பை கோரக் கூடாது என கட்சி கண்டிப்பான கட்டளையிட்டிருந்தது. கட்சிக்குள் எழுந்துள்ள குழு மோதலையடுத்து, கட்சி உறுப்பினர்கள் பிளவுபட்டு, இரகசிய வாக்களிப்பில் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த விரும்பியிருந்தனர்.

யாழிலுள்ள பல சபைகளில் இலங்கை தமிழ் அரசு கட்சி உறுப்பினர்கள் பலர், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களை தொடர்புகொண்டு, எப்படியாவது இரகசிய வாக்கெடுப்புக்கு நீங்கள் உறுப்பினர்களை தயார் செய்தால், தாம் உங்களின் ஆட்களுக்கு வாக்களிப்பதாக தெரிவித்திருந்ததை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்திருந்தது.

குறிப்பாக சுன்னாகம் பிரதேசசபையில் இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு 13 ஆசனங்கள் கிடைத்திருந்தது. ஆனால் அவர்களில் வெறும் 3 பேர்தான் தமிழரசு கட்சிக்காரர்கள். மிகுதியானவர்கள் கடந்த தேர்தலில் மஹிந்த அணி, டக்ளஸ் அணி, மணிவண்ணன் குழு உள்ளிட்டவற்றில் அங்கம் வகித்தவர்கள். வட்டாரங்களில் வெற்றிபெற்றவர்களை தொடர்புகொண்டு, அவர்களுக்கு உபதவிசாளர் பதவி தருவதாக பொய்யாக வாக்குறுதியளிக்கப்பட்டு, வேட்புமனு வழங்கப்பட்டது. இறுதியில் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததும், அதில் குறைந்தது 3 பேர் இரகசிய வாக்கெடுப்பு நடந்தால் கட்சிக்கு எதிராக வாக்களிக்க தயாராக இருந்ததை தமிழ்பக்கம் அறிந்திருந்தது.

பகிரங்கமாக எதிர்ப்பை வெளியிட்டு, பதவியை இழக்க யாரும் விரும்பவில்லை.

மானிப்பாயிலும் இதே நிலைமைதான். ஆனால் அந்த பகுதிகளில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினரால் இரகசிய வாக்கெடுப்புக்கு ஏற்பாடு செய்ய முடியவில்லை.

நிலைமை இப்படியிருக்க, யாழில் இரண்டு சபைகளில இரகசிய வாக்கெடுப்புக்கு எப்படி ஏற்பாடு செய்யப்பட்டது, அதில் ஒன்றில் இலங்கை தமிழரசு கட்சி மண் கவ்வ, மற்றொன்றில் மயிரிழையில் தப்பித்தது எப்படியென்பது பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் உள்ளன.

யாழ்ப்பாணத்தில் சமூகரீதியாக ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்களுக்கு இலங்கை தமிழ் அரசு கட்சியில் அவ்வளவாக இடம்வழங்கப்படுவதில்லை, ஓரங்கட்டப்பட்டு விடுவார்கள் என்ற விமர்சனம் நீண்டகாலமாக உள்ளது. அதை மெய்ப்பிப்பதை போலவே இம்முறையும் சம்பவங்கள் நடந்துள்ளன.

கோப்பாயில் தமிழ் அரசு சறுக்கியது எப்படி?

சாதிய விவகாரத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி எப்படி மேட்டிமைத்தனத்துடன் நடக்கிறது, இதனால் ஒடுக்கப்பட்ட சமூகங்களிலிருந்து தொடர்ந்து ஏன் அந்நியப்படுகிறது என்பதற்கு இம்முறை உள்ளூராட்சி தவிசாளர் தெரிவில் நடந்த சில சம்பவங்கள் சாட்சியமாய் உள்ளன.

கோப்பாய் பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளில் வாழும் கணிசமான ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் தமக்கான அரசியல் பிரதிநித்துவ அங்கீகாரத்துக்காக நீண்டகாலமாக குரல்கொடுத்து வருகிறார்கள். தமிழரசு கட்சியின் கோப்பாய் கிளையை கிட்டத்தட்ட அந்த சமூகமே கையாள்கிறது.

உள்ளூராட்சி தேர்தல் முடிந்த கையோடு, கோப்பாய் தொகுதி கிளைத்தலைவர் பரஞ்சோதி, அடிக்கடி கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தை சந்தித்து, தமது சமூகத்தை சேர்ந்த றேகன் என்பவருக்கே தவிசாளர் பதவி வழங்கப்பட வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்.

மறுபுறம், தற்போது வெளிநாட்டில் வசிக்கும் கோப்பாய் பிரதேசசபையின் முன்னாள் உபதவிசாளர் ஒருவர், மிகவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த தனது தரப்பின் ஒருவரை உபதவிசாளராக நியமிக்க வேண்டுமென கோரி வந்தார். அவர் சுமந்திரனுக்கு மிக நெருக்கமானவர். அதனால், அவருக்கும் சாதகமாக பதிலளிக்கப்பட்டு வந்தது.

இதற்குள், கட்சித் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம்- தனது நெருங்கிய உறவினரான கஜேந்திரகுமார் என்பவரை தவிசாளராக நியமிக்க விரும்பினார். அதற்கான காய்களையும் நகர்த்தி வந்தார்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடனான கூட்டணி உடன்படிக்கை பேச்சில், கோப்பாயை தர முடியாது என சீ.வீ.கே கறாராக சொன்னதன் பின்னணியும் இதுவாக இருக்கலாம்.

சரி, இவர்கள் எல்லோரும் இப்படி- எத்தனை விதமாக சிந்தித்தாலும், திட்டமிட்டாலும்- செயலாளர்(உண்மையான தலைவர்?) சுமந்திரன் அல்லவா இறுதி முடிவெடுக்க வேண்டும். அவர் எடுத்த முடிவு- தவநாயகம் என்பவரை தவிசாளராக்குவதென, அவர் யாழ்ப்பாணத்தின் ஆதிக்க சாதியைச்  சேர்ந்தவர்.

சுமந்திரன் கடைசி நேரத்தில்தான் தனது முடிவைச் சொன்னார். கட்சித்தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தை எப்படி கட்டுக்குள் வைத்திருப்பதென்ற சூட்சுமத்தையும் அவர் அறிந்திருக்கிறார். “கஜேந்திரகுமார் உங்கள் நெருங்கிய உறவினர். அவரை தவிசாளராக நியமித்தால் மாவை மீதான குற்றச்சாட்டுக்கள் உங்களிற்கும் வரும். அதனால் நீங்கள் தியாகம் செய்தே ஆக வேண்டும்“ என்ற சாரப்பட கூறியதாக, கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

பிறகென்ன, சீ.வீ.கே தியாகியானார். அவரது தரப்பினருக்கு கடும் அதிருப்தி.

தொகுதிக்கிளைத் தலைவர் பரஞ்சோதியை சமாளிக்க வேண்டுமே. அவரது ஆள் றேகனுக்கு உபதவிசாளர் தருவதாக சொல்லப்பட்டது. ஆனால் பரஞ்சோதி தரப்புக்கு கடும் அதிருப்தி. றேகன் உபதவிசாளர் பதவியை நிராகரித்ததாகவும் சொல்லப்படுகிறது.

முன்னர், உபதவிசாளர் தருவதாக சொல்லப்பட்ட- மிக ஒடுக்கப்பட்ட சமூக பிரதிநிதிக்கும் ஆப்பு வைக்கப்பட்டது. அவர் தரப்பும் கடும் அதிருப்தி. இப்படியாக கட்சிக்குள் 3 தரப்பு கடும் அதிருப்தியடைந்திருந்த நிலையிலேயே, 3 வாக்குகள் வித்தியாசத்தில் தமிழரசு கட்சி வேட்பாளர் தோல்வியடைந்தார்.

வலிகாமம் கிழக்கு பிரதேசசபையில்- இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு 11 ஆசனங்கள், தேசிய மக்கள் சக்திக்கு 9 ஆசனங்கள், தமிழ் தேசிய பேரவை, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு தலா 5 ஆசனங்கள், சுயேச்சை 1 மற்றும் மணி குழு தலா 2 ஆசனங்களையும், மற்றொரு சுயேச்சை மற்றும் ஈ.பி.டி.பி தலா 1 ஆசனத்தையும் கொண்டிருந்தன.

தவிசாளர் தெரிவில், முதல் சுற்றில் தமிழ் தேசிய பேரவை, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அணியும், தமிழரசு, ஈ.பி.டி.பி, மான் அணியும், தேசிய மக்கள் சக்தி அணியும் தவிசாளர் வேட்பாளர்களை நிறுத்தின. சபை இரகசிய வாக்கெடுப்பை ஆதரித்தது. இதில் குறைந்த வாக்கெடுத்த தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் நீக்கப்பட்டு, மீண்டும் வாக்கெடுப்பு நடந்தது.

இம்முறை தேசிய மக்கள் சக்தி நடுநிலை. மிகுதி 27 உறுப்பினர்கள்.

இரகசிய வாக்கெடுப்பா, பகிரங்க வாக்கெடுப்பா என வாக்கெடுப்பு நடந்த போது, இரகசிய வாக்கெடுப்புக்கு தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் ஆதரவளித்தார். அதன் பின்னணியில் சாதிய அபிமானம் இருந்தது என்கிறது ஒரு தரப்பு. இதனால் இரகசிய வாக்கெடுப்புக்கும், பகிரங்க வாக்கெடுப்பும் தலா 14 வாக்குகள் கிடைத்து, திருவுளச்சீட்டு முறையில் இரகசிய வாக்கெடுப்பு தீர்மானமாகியது.

இரகசிய வாக்கெடுப்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தி.நிரோஸ் 15 வாக்குகளையும், தமிழரசு கட்சியின் செல்வதிசைநாயகம் தவநாயகம் 12 வாக்குகளையும் பெற்றனர்.

சபை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி வசம்.

இப்பொழுது கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் சொல்கிறார்- வலி கிழக்கில் அந்த கருப்பாடுகளை கண்டுபிடித்தால் கடும் நடவடிக்கையென.

கரவெட்டியில் கடைசி நிமிட சம்பவம்

வடமராட்சி தெற்கு மேற்கு (கரவெட்டி) பிரதேசசபையிலும் இதேவிதமான ஒரு சம்பவம் நடந்தது. அங்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தவிசாளர் தெரிவில் போட்டியிடும் யோசனையில் இருக்கவில்லை. தவிசாளர் தெரிவுக்கு முதல்நாள் மாலையில்தான், போட்டியிடும் முடிவை எடுத்து, உறுப்பினர்களுக்கு அறிவித்தது.

அங்கு இரகசிய வாக்கெடுப்புக்கு தேசிய மக்கள் சக்தி ஆதரவளித்தது. தேசிய மக்கள் சக்தியின் உள்ளூர் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்திய, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உள்ளூராட்சிசபை உறுப்பினரை தமிழ்பக்கம் தொடர்பு கொண்ட போது, அவர் முதலில் பேசத்தயங்கினார். பின்னர், அதிக விபரங்களை வெளியிடக்கூடாதென்ற நிபந்தனையுடன் சொன்னவற்றின் சாரம்- “இரகசிய வாக்கெடுப்பை ஆதரித்த தேசிய மக்கள் சக்தியினரும் எமது பொடியள்தான். எமது சமூகத்தை சேர்ந்த ஒருவர் அதிகாரத்துக்கு வர வேண்டுமென்பதை அவர்களிடம் சொன்னேன். அவர்கள் அதை ஆதரிக்க தயாரென்றார்கள். இதனால் இரகசிய வாக்கெடுப்பை ஆதரித்தார்கள். கரவெட்டி தவிசாளருக்காக போட்டியிடுவதென எமது கட்சி முன்னரே தீர்மானித்து அறிவித்திருந்தால் நிலைமையை மாற்றியிருப்போம். ஒரு இரவு மட்டுமே அவகாசமிருந்தது. ஒரு வாக்கினால் தோல்வியடைந்தோம்“ என்றார்.

வலி வடக்கில் நடந்தது என்ன?

வலிகாமம் வடக்கு பிரதேசசபையை இலங்கை தமிழரசு கட்சி வெற்றியீட்டியது. சோ.சுகிர்தன் தவிசாளரானார். அவருடன் அறிமுகமான பெண்ணொருவர் தீமூட்டி தற்கொலை செய்தது உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, கட்சியின் ஒருசாரர் அவரை தவிசாளராக நியமிக்க வேண்டாமென கோரி வந்தனர். இதேகோரிக்கையுடன், தமது சமூகத்துக்கும் உரிய அங்கீகாரம் தேவையென குறிப்பிட்டு, பொன்னம்பலம் இராசேந்திரம் என்பவர், தவிசாளராக போட்டியிட விரும்பினார்.

காங்கேசன்துறை தொகுதியில் அவர்களது சமூகத்தினரே அதிகளவில் வசிப்பதாக சொல்கிறார்கள். மாவை சேனாதிராசா பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட சமயங்களிலும், முன்னாள் எம்.பி சிவமகாராசா காங்கேசன்துறை தொகுதியில் தொடர்ந்து அதிக வாக்கை பெற்றுவந்தார். மாவட்ட அளவின் மூலம் மாவை அதிக வாக்கை பெற்றாலும், தொகுதியில் சிவமகாராசா அதிக வாக்கை பெற்றதன் பின்னணி அதுதான்.

இராசேந்திரம் தனது சமூகத்துக்கு தவிசாளர் பதவி கேட்டபோது, தமிழரசு கட்சி தலைமை மறுத்து விட்டது. அது சுகிர்தனுக்குரியது என்றது. இராசேந்திரம் தவிசாளராக போட்டியிட்டால் அவரை ஆதரிக்கிறோம் என இலங்கை தமிழ் அரசு கட்சியில் தெரிவான 4 வரையான உறுப்பினர்கள் அவருக்கு வாக்குறுதியளித்திருந்தனர்.

அவர்களை திரட்டிய பின்னர், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடனும் அவர் பேச்சு நடத்தினார். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினர் இராசேந்திரத்தை ஆதரித்திருந்தால், அவர் தவிசாளராகி, அவரை கட்சியிலிருந்து நீக்கி- தமிழரசு கட்சியில் குழப்பம் ஏற்பட்டிருக்கும்.

ஆனால், தமிழ் தேசிய பேரவையின் செ.கஜேந்திரன் அந்த நகர்வை விரும்பவில்லை. யார் வென்றாலும், அது தமிழரசு கட்சிதானே என குறிப்பிட்டுள்ளார். என்றாலும், பின்னர் ஓரிரு நாட்களிலேயே அவர் “அரசியல் பழகி“ ஊர்காவற்துறையில் தமிழரசு கட்சி உறுப்பினரின் ஆதரவுடன் தமது தரப்பு ஆட்சியமைக்க சம்மதித்திருந்தது வேறு கதை.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஆதரவு தமக்கு கிடைக்காது என தெரிந்த பின்னர், பொ.இராசேந்திரம் தவிசாளர் தெரிவில் நடுநிலை வகித்தார். தவிசாளர் தெரிவு நடந்த கையோடு, அவரை கட்சியை விட்டு நீக்கும் முடிவை கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்தார்.

 

spot_imgspot_img

More like this
Related

“அம்மன் கனவில் வந்து சொன்னதால்…” – கோயிலில் மடிப்பிச்சை ஏந்தியது குறித்து நளினி விளக்கம்!

அம்மன் தன் கனவில் வந்து சொன்னதால் மடிப்பிச்சை ஏந்தியதாக நடிகை நளினி...

80 வயது மூதாட்டியின் மரண தண்டனையை இரத்து செய்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்

ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தால் 80 வயது மூதாட்டி ஒருவருக்கு விதிக்கப்பட்ட மரண...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்திலேயே சாரதி அனுமதிப்பத்திரம்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்